கடைசி நிமிடத்தில் ரெயிலை தவறவிட இருந்த 90 வயது மூதாட்டியை தூக்கிக்கொண்டு ஓடிய ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்


கடைசி நிமிடத்தில் ரெயிலை தவறவிட இருந்த 90 வயது மூதாட்டியை தூக்கிக்கொண்டு ஓடிய ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்
x
தினத்தந்தி 27 March 2021 11:13 AM GMT (Updated: 27 March 2021 11:13 AM GMT)

எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நடைமேடை எண் 8-ல் வந்து நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தது.

சென்னை, 

தாம்பரம் ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நடைமேடை எண் 8-ல் வந்து நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தது.

ரெயில் புறப்பட தயாரான கடைசி நிமிடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நடைமேடை படிக்கட்டில், ‘ரெயிலை நிறுத்துங்கள்’ என என்ஜின் டிரைவரை பார்த்து கத்திக்கொண்டே இறங்கி வந்தனர். அதில் ஒரு 90 வயதான மூதாட்டி நடக்க முடியாமல் மெதுவாக இறங்கிகொண்டிருந்தார். ஆனால் என்ஜின் டிரைவர் ரெயிலை இயக்க தயாரானதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் ஜோஸ், கூட்டத்துக்கு நடுவில் திடீரென பாய்ந்து ஓடி மூதாட்டியை லாவகமாக தூக்கிக்கொண்டு, ரெயிலை நோக்கி ஓடினார். அவருடன், மூதாட்டியின் குடும்பத்தினரும் ஓடி வந்தனர். ரெயில் பெட்டியின் அருகில் வந்து, மூதாட்டியை பத்திரமாக ரெயிலில் ஏற்றிவிட்டார். இதனை கண்ட அங்கிருந்த பயணிகள், ஜோஸின் மனிதநேயத்தை கண்டு வியந்து அவரை பாராட்டினர்.

இந்த சம்பவம் நடப்பதற்கு 20 நிமிடத்துக்கு முன்புதான் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பரமக்குடி செல்வதற்காக தாம்பரம் ரெயில் நிலையத்தில் நின்றிருந்த அனகாபுத்தூர் பாலாஜி நகரைச் சேர்ந்த அமிதா பானு (50) தவறுதாக தாம்பரம் வந்து புறப்பட்டு சென்ற எழும்பூர்-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற முயன்றார். இதில் நிலைதடுமாறி ரெயிலுக்கும், நடைமேடைக்கும் இடையில் விழுந்த அவரை மின்னல் வேகத்தில் மீட்டு அவரது உயிரையும் ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் ஜோஸ் காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story