7 சட்டமன்ற தொகுதிகளிலும் 1½ லட்சம் புதிய வாக்காளர்கள் ஆதரவை பெறுவதில் வேட்பாளர்கள் தீவிரம்
7 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 1½ லட்சம் புதிய வாக்காளர்களின் ஆதரவை பெறுவதில் வேட்பாளர்கள் தீவிரம் காட்டுகின்றனர்.
திண்டுக்கல்:
தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, அ.ம.மு.க. கூட்டணி, ம.நீ.ம. கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் இதர கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் சூறாவளியாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சிக்கும் குறிப்பிட்ட அளவில் வாக்குகள் இருக்கின்றன.
அவை அந்த கட்சிகளுக்கு அடிப்படை பலத்தை கொடுக்கின்றன. அதோடு வெற்றியை பெறுவதற்கு கூடுதல் வாக்குகளை பெற வேண்டும். ஆனால், இந்த தேர்தலில் போட்டி பலமாக இருப்பதால் வாக்குகள் சிதறும் வாய்ப்பு உள்ளது. இதனால் பெரும்பாலான தொகுதிகளில் பலத்த போட்டி நிலவும் என்றே தெரிகிறது.
அதிலும் ஒருசில தொகுதிகளில் வெற்றி, தோல்விக்கு இடையே குறைந்த அளவு வாக்குகள்தான் வித்தியாசமாக இருக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதில் புதிய வாக்காளர்களின் பங்களிப்பு முக்கிய அம்சமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே, புதிய வாக்காளர்களின் ஆதரவை பெறுவதில் அனைத்து கட்சிகளும் ஆர்வம் காட்டி வருகின்றன.
1½ லட்சம் பேர்
இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது 7 தொகுதிகளிலும் மொத்தம் 17 லட்சத்து 19 ஆயிரத்து 609 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது 18 லட்சத்து 77 ஆயிரத்து 77 வாக்காளர்கள் உள்ளனர். எனவே, 1 லட்சத்து 57 ஆயிரத்து 468 பேர் புதிய வாக்காளர்கள் ஆவர்.
இதில் பழனியில் 20 ஆயிரத்து 115 பேரும், ஒட்டன்சத்திரத்தில் 18 ஆயிரத்து 202 பேரும், ஆத்தூரில் 23 ஆயிரத்து 40 பேரும், நிலக்கோட்டையில் 25 ஆயிரத்து 969 பேரும், நத்தத்தில் 24 ஆயிரத்து 762 பேரும், திண்டுக்கல்லில் 28 ஆயிரத்து 247 பேரும், வேடசந்தூரில் 17 ஆயிரத்து 133 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
எனவே, புதிய வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் வேட்பாளர்கள் வாக்குறுதிகளை அள்ளிவீசுகின்றனர். இதனால் புதிய வாக்காளர்களின் ஆதரவு யாருக்கு, என்பதில் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி அனைவருக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story