காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்க வசதியாக 27 நடமாடும் குழுக்கள் கலெக்டர் தகவல்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்க வசதியாக 27 நடமாடும் குழுக்கள் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 27 March 2021 9:17 PM IST (Updated: 27 March 2021 9:17 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், 80 வயதை கடந்தோர் தபால் வாக்களிக்க வசதியாக 27 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 2,101 பேர் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்கள் வாக்களிக்க ஏதுவாக 4 சட்டமன்ற தொகுதிகளிலும் நடமாடும் வாக்குப்பதிவுக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 28, 30-ந்தேதிகளில் அவர்களது வீடுகளுக்கே குழுவினர் சென்று அஞ்சல் வாக்குகளை வழங்கி எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதை விளக்கி கூறுவார்கள். இந்த குழுவில் 2 வாக்குப்பதிவு அலுவலர்கள், ஒரு பார்வையாளர், ஒரு வீடியோ கிராபர் மற்றும் போலீசார் இருப்பார்கள். இதற்கென மொத்தம் 27 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

28, 30-ந்தேதிகளில் வாக்களிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டால் 31-ந்தேதி அன்றும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அன்றைய தினமும் வாக்களிக்க இயலாத நிலை ஏற்பட்டால் இறுதி வாய்ப்பாக அடுத்த மாதம் 1-ந்தேதி வாக்களிக்கலாம்.

வாக்குப்பதிவுகள் அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்படும். அஞ்சல் வாக்குப்பதிவு தொடர்பான விவரங்களை அரசியல் கட்சியினர், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வேட்பாளர்களுக்கும் தெரிவித்துள்ளோம்.

காஞ்சீபுரத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களாக 8,984 பேரும், இதர தேர்தல் பணியில் 2,100 பேரும் ஈடுபடவுள்ளனர். இவர்களில் 6,015 பேர் இன்று (சனிக்கிழமை) தபால் வாக்களிக்கவுள்ளனர். வெளி மாவட்டங்களில் வாக்கு உள்ளவர்களுக்கு அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தபால் வாக்களிக்கவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் இதுவரை ரூ.1 கோடியே 69 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 4 தொகுதிகளிலும் ஒவ்வொரு தொகுதிக்கும் முழுவதும் பெண்கள் மட்டுமே செயல்படும் வகையிலான 4 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகள் அனைத்திலும் கர்ப்பிணிகள், முதியோர்கள் வந்தவுடன் வாக்களிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் உடன் இருந்தார்.

Next Story