234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்-பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் பேட்டி


234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்-பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் பேட்டி
x
தினத்தந்தி 27 March 2021 9:25 PM IST (Updated: 27 March 2021 9:25 PM IST)
t-max-icont-min-icon

234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று திருவண்ணாமலையில் பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி கூறினார்.

திருவண்ணாமலை 

234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று திருவண்ணாமலையில் பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி கூறினார்.

அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி

திருவண்ணாமலையில், பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சிறப்பாக ஆட்சி செய்து வருகின்றனர். 

எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற போது 2 அல்லது 3 மாதத்தில் இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என்று பெரும்பாலானோர் தெரிவித்தனர். ஆனால் அவர் வெற்றிகரமாக இந்த 4 ஆண்டு ஆட்சியை சிறப்பாக நடத்தி உள்ளார். 

அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமைந்து உள்ளது. அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தேர்தல் அறிக்கையை ஒப்பிட்டு பார்க்கும் போது அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மிகவும் சிறப்பாக உள்ளது. 

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் என்ன செய்ய போகிறோம் என்று முழுமையாக தெரிவித்து உள்ளனர். ஆனால் தி.மு.க.வினர் அப்படி எதையும் சொல்லவில்லை.

தி.மு.க. வாரிசு அரசியல்

2006 முதல் 2011 வரை தி.மு.க. ஆட்சி எப்படி நடைபெற்றது என்று மக்களுக்கு தெரியும். ஒரு நாளைக்கு 16 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. தமிழக மக்கள் மின்வெட்டை விரும்பவில்லை. ஒரு வேளை தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மின்சார தடை மீண்டும் தொடரும். 

தி.மு.க. வாரிசு அரசியல் செய்து வருகிறது. தி.மு.க. என்றால் வாரிசு, பணம், கட்டப்பஞ்சாயத்து என்று தான் அர்த்தம். தி.மு.க. என்பது கார்ப்பரேட் கம்பெனி. 

இதில் 50 சதவீத பங்கு கலைஞர் குடும்பத்திற்கும், 5 முதல் 10 சதவீதம் பங்கு எ.வ.வேலு, ஜெகத்ரட்சகன் போன்றவர்களும் பெறுகின்றனர்.

தனது குடும்பத்தினர் வருமானத்தை பெருக்கி கொள்ளவே அவர்கள் ஆட்சிக்கு வர பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் மக்கள் நலனை கருத்தில் கொள்ளவில்லை. 

அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் கூட்டணியில் உள்ள கட்சியினர் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள். பிரதமர் மோடி தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொடுத்து உள்ளார்.

234 தொகுதிகளிலும் வெற்றி

48 லட்சம் குடும்பத்தினர் கிஷான் திட்டத்தின் மூலம் ரூ.6 ஆயிரம் நிதியுதவி பெற்று உள்ளனர். மோடி தான் தமிழக மக்களின் உண்மையான நண்பன். 

யார் வெற்றி பெற வேண்டும் என்று மக்கள் தான் முடிவு செய்வார்கள். தமிழக மக்கள் கட்டப்பஞ்சாயத்து, நிலம் அபகரிப்பு போன்றவற்றை விரும்பவில்லை. ஆனால் அதை தி.மு.க.வினர் தொடர்ந்து செய்து வருகிறார்கள். 

தமிழக வளர்ச்சிக்கு பா.ஜ.க. உறுதுணையாக இருந்து வருகிறது. நாங்கள் 20 தொகுதியில் மட்டும் போட்டியிட வில்லை. எங்கள் கூட்டணியில் உள்ள கட்சியினர் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்கள். நாங்களும் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கிறோம். அவர்களும் எங்களுக்கு ஒத்துழைக்கிறார்கள். 234 தொகுதிகளிலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம். 

எ.வ.வேலுவிடம் கருப்பு பணம் இருக்கிறதா?

வருமான வரித்துறை என்பது யாருடைய தலையிடும் இல்லாத ஒரு சுதந்திரமான அமைப்பு. அவர்களுக்கு எதாவது தகவல் கிடைத்து இருக்கும். அதனால் தான் சோதனை செய்கிறார்கள். 

கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் தான் வருமான வரித்துறையை கண்டு கவலைப்பட வேண்டும். எ.வ.வேலுவிடம் கருப்பு பணம் இருக்கிறதா?.

தமிழ் கலாசாரத்திற்கு நண்பன் யார்?, எதிரி யார்? என்று மக்களுக்கு தெரியும். ‘நீட்’ தேர்வால் தமிழக மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். முதல் 3 இடத்தில் தமிழக மாணவர்கள் தான் உள்ளனர். 

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story