திருவண்ணாமலை; வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு-கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதனை கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதனை கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் பொதுத்தேர்தல் வருகிற 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
அன்று மாவட்ட முழுவதும் உள்ள 2,885 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
வாக்குச்சாவடிகளில் பணிபுரிவதற்காக ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த 13 ஆயிரத்து 808 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் இந்த பயிற்சி வகுப்பு நடந்தது.
இதில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களது தபால் வாக்கு செலுத்தும் முறைகள் குறித்தும், வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் பணிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் அலுவலர்கள் வாக்குப்பதிவு எந்திரங்கள் கையாளும் முறை, வாக்குப்பதிவிற்கு முந்திய நாள் வாக்குச்சாவடியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், வாக்குப்பதிவு நாள் அன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.
மாதிரி வாக்குப்பதிவு முறை, வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டியவை, வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவங்கள், ஆவணங்கள் மற்றும் வாக்குப்பதிவு முகவர்களுக்கான குறிப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மற்றும் சண்முகா தொழிற்சாலை அரசு பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான பயிற்சி கையேட்டினை கலெக்டர் வழங்கினார்.
மேலும் தேர்தல் பயிற்சி நடைபெறும் வகுப்பறைகள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு நடைபெறும் பகுதி, காவல்துறை அலுவலர்கள் மற்றும் போலீசாருக்கான தபால் வாக்குப்பதிவு நடைபெறும் பகுதி, அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ள பகுதி ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.
அப்போது தேர்தல் பொது மேற்பார்வையாளர் அருண்கிஷோர் டோங்க்ரே, முதன்மை கல்வி அலுவலர் அருட்செல்வம், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story