கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம்
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கழுகுமலை:
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் இரவு சுவாமி வள்ளி தெய்வானையுடன் வெவ்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து திருவனந்தல் பூஜை, காலசந்தி பூஜை நடந்தது.
பின்னர் கோ ரதத்தில் சண்டிகேஸ்வரர், சட்டத்தேரில் விநாயக பெருமான், வைரத்தேரில் கழுகாசலமூர்த்தி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் தெற்கு ரதவீதி, பஸ் நிலையம் ரோடு, அரண்மனை வாசல் தெரு, கீழ பஜார் வழியாக வந்து மாலையில் நிலையை அடைந்தது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து இரவில் சுவாமி வள்ளி தெய்வானையுடன் மயில் வாகனத்தில் எழுந்தருளி தேர் தடம் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story