விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி- தபால் வாக்கினையும் பதிவு செய்தனர்
விழுப்புரத்தில் அரசு பணியாளர்கள் தங்களது தபால் வாக்கு களை பதிவு செய்தனா்.
விழுப்புரம்,
2-ம் கட்ட பயிற்சி
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு பணியாளர்களுக்கு முதல்கட்ட பயிற்சி கடந்த வாரம் அளிக்கப்பட்ட நிலையில் நேற்று 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்கு விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், திண்டிவனம் தொகுதிக்கு திண்டிவனம் மான்போர்ட் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியிலும், மயிலம் தொகுதிக்கு மயிலம் பவ்டா கலை அறிவியல் கல்லூரியிலும், வானூர் தொகுதிக்கு வானூர் அரவிந்தர் கலை அறிவியல் கல்லூரியிலும், விக்கிரவாண்டி தொகுதிக்கு விக்கிரவாண்டி புனித மேரிஸ் மெட்ரிக் பள்ளியிலும்,
திருக்கோவிலூர் தொகுதிக்கு திருக்கோவிலூர் ஸ்ரீவித்யாமந்திர் மேல்நிலைப்பள்ளியிலும், செஞ்சி தொகுதிக்கு செஞ்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் பயிற்சி நடைபெற்றது.
இதில் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். வாக்குப்பதிவு எந்திரத்தை கட்டுப்பாட்டு எந்திரத்துடன் இணைப்பது, வி.வி.பேட் எந்திரத்தின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
தபால் வாக்குப்பதிவு
மேலும் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட ஆசிரியர்கள், அரசு பணியாளர்களுக்கு பயிற்சி முடிந்ததும் நேற்று மாலை அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரால் தபால் வாக்குச்சீட்டு வழங்கப்பட்டது.
அதனை பெற்ற ஆசிரியர்கள், அரசு பணியாளர்களுக்கு அதே இடத்திலேயே விருப்பப்பட்டால் தபால் வாக்குகளை செலுத்தலாம் அல்லது வாக்கு எண்ணும் நாளான மே 2-ந் தேதிக்குள் தபால் வாக்குகள் கிடைக்கும் வகையில் அனுப்பலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதற்கு ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் பலர் விருப்பம் தெரிவித்ததன்பேரில் பயிற்சி வகுப்பு நடந்த இடத்திலேயே தபால் வாக்கு செலுத்த பெட்டி வைக்கப்பட்டது.
அதன்பேரில் ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் விருப்பத்தின்பேரில் தங்களது தபால் வாக்கினை பதிவு செய்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், தற்போது பலர் விருப்பத்தின்பேரில் தபால் வாக்கினை செலுத்தியுள்ளனர்.
அந்த தபால் வாக்குகள் சட்டமன்ற தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு அவை அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதனை அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகள், ஒரு பெட்டியில் போட்டு சீல் வைத்து பாதுகாப்பு அறையில் வைப்பார்கள் என்றார்.
கலெக்டர் ஆய்வு
இதனிடையே விழுப்புரம், திருக்கோவிலூர் ஆகிய இடங்களில் நடந்த பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ஆ.அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சரஸ்வதி, விழுப்புரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அரிதாஸ், திருக்கோவிலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சாய்வர்தினி ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story