பழனி பங்குனி உத்திர திருவிழாவில் "அரோகரா" கோஷம் முழங்க முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்


பழனி பங்குனி உத்திர திருவிழாவில் அரோகரா கோஷம் முழங்க முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 27 March 2021 10:57 PM IST (Updated: 27 March 2021 10:57 PM IST)
t-max-icont-min-icon

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் "அரோகரா" கோஷம் முழங்க முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. இன்று தேரோட்டம் நடக்கிறது.

பழனி :

பழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திர திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த 22-ந்தேதி திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 6-ம்நாளான நேற்று மாலை முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக காலை 9.15 மணிக்கு தந்தப்பல்லக்கில் சன்னதி வீதி, கிரிவீதிகளில் சாமி புறப்பாடு நடைபெற்றது.
மதியம் 3 மணிக்கு அடிவாரம் சவுமிய நாராயண கவராய நாயக்கர் மண்டபத்தில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சிகள் தொடங்கியது. அதன்படி புண்ணியாக வாஜனம், 6 கலசங்கள் வைத்து கலசபூஜை, மாங்கல்ய பூஜை, கந்த யாகம், சுப்பிரமண்யா யாகம், பூர்ணாகுதி நடைபெற்றது. தொடர்ந்து திருக்கல்யாணத்திற்கான சடங்குகள் நடைபெற்றன.
திருக்கல்யாணம்
பின்னர் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு 7.50 மணிக்கு கன்யா லக்னத்தில் முத்துக்குமார சாமி, வள்ளி-தெய்வானைக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் "வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா" "வீர வேல் முருகனுக்கு அரோகரா" "தண்டாயுதபாணிக்கு அரோகரா" என்று கோஷமிட்டனர். மாலை மாற்றும் நிகழ்ச்சியை தொடர்ந்து 16 வகை தீபாராதனைக்கு பின் ஓதுவார்கள் தேவாரம் பாடினர். கோவில் குருக்கள் வேத பாராயணம் செய்ததை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்ச்சிகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.
திருக்கல்யாண நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை உதவி ஆணையர் செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் அப்புகுட்டி, அறங்காவலர்கள் செல்ல முத்தையா, கமலக்கண்ணன், சேகர், லதா ஸ்ரீதர், சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், தனசேகர், பழனிவேலு, கந்தவிலாஸ் உரிமையாளர் செல்வகுமார், நவீன், நரேஷ், கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹர முத்து, சரவணப்பொய்கை கந்த விலாஸ் உரிமையாளர் பாஸ்கரன், ஜெயம் லாட்ஜ் உரிமையாளர் சரவணன், அருள்மிகு சாந்த குல சவுமிய நாராயண கவராய நாயக்கர் சமுதாய கட்டளை அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன், அறங்காவலர்கள் செந்தில்குமார், ஆறுமுகம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இன்று தேரோட்டம்
பங்குனி உத்திர திருவிழாவின் 7-ம் நாளான இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 4.30 மணிக்கு தீர்த்தவாரிக்கு எழுந்தருளல், காலை 6 மணிக்கு தீர்த்தம் வழங்குதல், காலை 9 மணிக்கு தந்தப்பல்லக்கில் திருஆவினன்குடி கோவிலில் எழுந்தருளல், பகல் 11 மணிக்கு மேல் முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானையுடன் திருத்தேர் எழுதல், மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை காலை 9 மணிக்கு தந்தப்பல்லக்கில் திருவுலா காட்சியும், அதைத்தொடர்ந்து இரவு தங்கக்குதிரை வாகனத்தில் திருவுலா காட்சியும் நடைபெறுகிறது. 30-ந்தேதி இரவு 7.30 மணிக்கு வெள்ளி பிடாரி மயில் வாகனத்தில் திருவுலாவும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு புதுச்சேரி சப்பரத்தில் சன்னதி வீதி, கிரி வீதிகளில் திருவுலா காட்சியும் நடக்கிறது. 10-ம் நாள் திருவிழாவான 31-ந்தேதி காலை அபிஷேகம், ஆராதனையும்,  புதுச்சேரி சப்பரத்தில் கிரிவீதி உலாவும் காலை 10.25 மணிக்கு சாந்து மண்டகப்படியும், இரவு 7 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் திருவுலாவும் நடக்கிறது. இரவு 11 மணிக்கு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Next Story