வானதி சீனிவாசனுடன் பொதுவிவாதத்தில் கமல்ஹாசன் பங்கேற்க வேண்டும்


மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் கோலாட்டம்
x
மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் கோலாட்டம்
தினத்தந்தி 27 March 2021 11:07 PM IST (Updated: 27 March 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் பிரச்சினை, வளர்ச்சி திட்டங்கள் குறித்து வானதி சீனிவாசனுடன், கமல்ஹாசன் பொதுவிவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்று கோவையில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தெரிவித்தார்.

கோவை,

மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி விமானம் மூலம் நேற்று கோவைக்கு வந்தார். அவருக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 அதைத்தொடர்ந்து அவர், வடகோவையில் உள்ள குஜராத் சமாஜம் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு குஜராத்தை சேர்ந்தவர்கள் காலில் சலங்கை கட்டி பாரம்பரிய நடனம் ஆடி அவரை வரவேற்றனர்.

அப்போது அங்கு திரண்டு இருந்த பெண்களுடன் சேர்ந்து மத்திய மந்திரி  ஸ்மிரிதி இரானி, கோவை தெற்கு தொகுதி பா.ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் கோலாட்டம் ஆடி மகிழ்ந்தனர்.
பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பேசியதாவது;-

தேர்தலில் வாக்களிப்பது என்பது கடமை அல்ல. அது புனிதமான காரியம். நீங்கள் தாமரைக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்தால், ஏழைகள் வாழ்வில் முன்னேற்றம் அடைவார்கள். 

இந்த புண்ணிய காரியத்தின் மூலம் லட்சுமிதேவி தாமரையில் அமர்ந்து உங்கள் இல்லம் வருவாள், டார்ச் லைட்டில் அமர்ந்து அல்ல.

கொரோனா தொற்று காலத்தில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட் டது. 80 கோடி பேருக்கு 8 மாதத்திற்கு இலவசமாக ரேஷன் பொருட்க ளை வழங்கியது. 26 கோடி பேருக்கு நேரடியாக பணம் வங்கியில் செலுத்தப்பட்டது.

 கொரோனா காலத்தில் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்திருந்தால் மக்கள் நிலைமை மோசமாகி இருக்கும். நீங்கள் மோடிக்கு ஓட்டு போட்டதால் தமிழகத்திற்கு 11 மருத்துவ கல்லூரிகள், எய்ம்ஸ் மருத்துவமனை கிடைத்தது.

நாடு முழுவதும் 10 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 90 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன. இதன்மூலம் ஏழை பெண்களின் பயம் நீக்கப்பட்டு உள்ளது.

ஜன்தன் மூலம் 40 கோடி வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் 1 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் 10 கோடி விவசாயி களுக்கு ரூ.1 லட்சம் கோடி வழங்கப்பட்டு உள்ளது. 

இதில் 50 லட்சம் விவசாயிகள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இது இங்கே டார்ச் லைட் பிடித்து கொண்டு திரிபவர்களுக்கு தெரிய வேண்டும்.

பா.ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசனுடன், கமல்ஹாசன் பொது விவாதத்தில் பங்கேற்க வேண்டும். அதில், பொதுமக்களின் பிரச்சினைகள், தீர்வுகள், வளர்ச்சி திட்டங்கள் குறித்து யாருடைய கருத்துகள் சரியானது என்று விவாதிக்கலாம். 

ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 5 கோடி குடும்பங்க ளுக்கு சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறது. 

இதில் தமிழ்நாட்டில் 1 கோடியே 36 லட்சம் குடும்பங்கள் அடங்கும். எனவே நீங்கள் தாமரை சின்னத்திற்கு வாக்களித்து வானதி சீனிவாசனை வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story