திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவில் தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே திருவாமாத்தூரில் புகழ்பெற்ற முத்தாம்பிகை சமேத அபிராமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதுபோல் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர பெருவிழா கடந்த 15-ந் தேதி தேரடி விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது.
அதன் பின்னர் 18-ந் தேதி பிடாரி உற்சவம், யாகசாலை பூஜையும், 19-ந் தேதி கொடியேற்றம், அதிகாரநந்தி பஞ்சமூர்த்தி புறப்பாடும், 20-ந் தேதி முதல் ஒவ்வொரு நாளும் சந்திரபிரபை, பூதவாகனம், நாகவாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், கயிலாய வாகனம், குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் சாமி வீதியுலாவும், நேற்று முன்தினம் மாலையில் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடந்தது.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை 8.30 மணியளவில் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்தாம்பிகை சமேத அபிராமேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள அந்த தேரை ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்துச்சென்றனர்.
இந்த தேர், திருவாமாத்தூர் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி, அசைந்தபடி சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து, அங்கு நடந்த சிறப்பு தீபாராதனையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராமலிங்கம், ஆய்வாளர் அன்பழகன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் குபேரன் மற்றும் கோவில் பணியாளர்கள், திருவாமாத்தூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story