திட்டக்குடி வைத்தியநாதசாமி கோவில் தேரோட்டம்


திட்டக்குடி வைத்தியநாதசாமி கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 27 March 2021 11:32 PM IST (Updated: 27 March 2021 11:32 PM IST)
t-max-icont-min-icon

பங்குனி உத்திரவிழாவையொட்டி திட்டக்குடி வைத்தியநாதசாமி கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

திட்டக்குடி, 

திட்டக்குடியில் உள்ள பழமைவாய்ந்த வைத்தியநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், சாமி வீதிஉலா நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது.
 விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது.
 இதையொட்டி காலையில் விநாயகர், வைத்தியநாதசாமி, அசனாம்பிகை அம்மன் சாமிகளுக்கு பால், பன்னீர், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், திரவியபொடி உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. 

சிறப்பு வழிபாடு

 அதன்பிறகு அனைத்து சாமிகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரடிக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு உலகமக்கள் நலம் பெற வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது. அதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேரில் விநாயகர், அம்மன், வைத்தியாதர் ஆகியோர் எழுந்தருளினர். இதையடுத்து அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தேரானது 4 வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. அப்போது ஆங்காங்கே பக்தர்கள் கோலமிட்டும், தேங்காய் உடைத்தும் தேரை வரவேற்று சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story