முத்துமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா


முத்துமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
x
தினத்தந்தி 28 March 2021 12:47 AM IST (Updated: 28 March 2021 12:47 AM IST)
t-max-icont-min-icon

திருக்கடையூர் முத்துமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருக்கடையூர்:
திருக்கடையூர் முத்துமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முத்துமாரியம்மன் கோவில்
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் கீழவீதியில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து நேற்று தீமிதி திருவிழாவை முன்னிட்டு ஆனை குல விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் அலகு காவடிகள், கரகம் எடுத்து மேளதாளங்கள் முழங்க வானவேடிக்கையோடு ஊர்வலமாக சன்னதி வீதி, வடக்கு வீதி, கீழவீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
தீ மிதித்து நேர்த்திக்கடன்
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள தீக்குண்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத்தொடர்ந்து இரவு அம்மன் முத்துபல்லக்கில் வீதிஉலா காட்சி நடைபெற்றது.
 இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் பொறையாறு போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

Next Story