தேர்தல் நடத்தை விதிகளை மீறிய 193 பேர் மீது வழக்கு
கடலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 193 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர்,
தமிழக சட்டசபைக்கான தேர்தல் வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளதால், போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 27 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 3 குழுக்கள் வீதம் அமைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர 27 நிலையான கண்காணிப்பு குழுவும், 9 வீடியோ கண்காணிப்பு குழுவும், 9 செலவின கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசுப் பொருட்களையும் இக்குழுவினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
வழக்குப்பதிவு
அந்த வகையில் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்தல், பதுக்கி வைத்தல் மற்றும் போதைபொருள், வெடிபொருட்கள் வைத்திருந்ததாகவும், சட்ட-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தியதாகவும் மொத்தம் 193 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த கடந்த மாதம் 26-ந் தேதி மாலை முதல் நேற்று மாலை வரை 2 கோடியே 83 ஆயிரத்து 902 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ரூ.42 லட்சத்து 99 ஆயிரத்து 912 மதிப்புள்ள பாத்திரங்கள், சேலை, தொப்பிகள், டீ-சர்ட்டுகள், மதுபானம் உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட் டுள்ளது. இந்த பணம் மற்றும் பரிசு பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2 கோடியே 43 லட்சத்து 83 ஆயிரத்து 814 ஆகும்.
Related Tags :
Next Story