தி.மு.க. கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்- ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி


தி.மு.க. கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்- ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 28 March 2021 1:57 AM IST (Updated: 28 March 2021 1:57 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

நெல்லை, மார்ச்:
வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்கள் நலனுக்கு எதிராக..

தற்போது பா.ஜனதா, அ.தி.மு.க. ஆகிய 2 அரசுகளும், மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கக்கூடிய, மக்கள் நலனுக்கு எதிராக செயல்படக்கூடிய அரசுகளாக உள்ளன. மத்திய அரசு கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்டத் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. மேலும் விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களையும் கொண்டுவந்துள்ளது. இதற்கு அ.தி.மு.க. அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.
விவசாய குடும்பத்தில் பிறந்தேன் என்று சொல்லும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ஏன் ஆதரித்தார். இதனால் இவர் தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளார்.
பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவோம் என கூறியுள்ளனர். அந்த கல்விக்கொள்கையில், மாணவர்கள் குறைவாக உள்ள அரசு பள்ளிகளை மூடுவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், ஏழை குழந்தைகளின் கல்வி பாதிக்கும். இதனை அ.தி.மு.க. அரசு ஆதரிக்கிறது.

ஆட்சி அமைக்கும்

மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி. காரணமாக 50 ஆயிரம் சிறு குறு தொழில்கள் அழிந்துள்ளன எனவும், இதனால், 5 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாகவும் மாநில அமைச்சரே அண்மையில் கூறியுள்ளார். எனவே இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story