அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு போடத்தொடங்கினர்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 2 தொகுதிகளில் அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு போடத்தொடங்கினர். இதில் முதல் நாளான நேற்று 314 பேர் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
பெரம்பலூர்:
3,916 அரசு ஊழியர்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள மொத்தம் 3,916 அரசு ஊழியர்களுக்கு, தபால் ஓட்டுகள் நேற்று நடந்த பயிற்சி வகுப்பில் வழங்கப்பட்டது.
இதேபோல் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 531 போலீசாருக்கும், குன்னம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 816 போலீசாருக்கும், அரியலூரில் பணியாற்றக்கூடிய பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 146 போலீசாருக்கும், தேர்தலின்போது பணியாற்றக்கூடிய 72 மண்டல அலுவலர்களுக்கும், பிற மாவட்டங்களில் பணியாற்றக்கூடிய பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் தபால் ஓட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
தபால் ஓட்டு போட்டனர்
இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளில் பணியாற்றக்கூடிய அலுவலர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட தபால் ஓட்டுகளை நேற்று முதல் போடத்தொடங்கினர். இதையொட்டி அவர்கள் கலந்து கொண்ட 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற இடங்களில், தபால் ஓட்டு அளிக்க துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் பாதுகாப்புடன் தனி அறை அமைக்கப்பட்டிருந்தது.
அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த சீல் வைக்கப்பட்ட பெட்டியில், அரசு ஊழியர்கள் தபால் ஓட்டுகளை போட்டனர். முதல் நாளான நேற்று பெரம்பலூர் தொகுதியில் 128 பேரும், குன்னம் தொகுதியில் 186 பேரும் என மொத்தம் 314 பேர் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story