ஈரோடு மாவட்டத்தில் 304 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை; தேர்தல் பார்வையாளர்கள் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் 304 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று தேர்தல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 304 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று தேர்தல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், தேர்தல் அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சி.கதிரவன் தலைமை தாங்கினார்.
தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் நவ்தீப் ரின்வா, அடோனு சாட்டர்ஜி, மனிஷ் அகர்வால், பிரசாந்த் குமார் மிஷ்ரா, நர்பு வாங்டி பூட்டியா, தேர்தல் செலவின பார்வையாளர் அருப் சாட்டர்ஜி, சஞ்சீவ்குமார் தேவ், காவல் பார்வையாளர் விஜய ராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவர்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்குச்சாவடிகள் குறித்தும், அதில் பதற்றமான சாவடிகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
வாக்குச்சாவடிகள்
பின்னர் தேர்தல் பார்வையாளர்கள் பேசும்போது கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் 403 வாக்குச்சாவடிகளும், மொடக்குறிச்சி தொகுதியில் 332 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. பெருந்துறை தொகுதியில் 325 வாக்குச்சாவடிகள், பவானி தொகுதியில் 335 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் 303 வாக்குச்சாவடிகளும், கோபி தொகுதியில் 349 வாக்குச்சாவடிகளும், பவானிசாகர் தொகுதியில் 374 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 2 ஆயிரத்து 741 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதில் அந்தியூர் தொகுதியில் 21 வாக்குச்சாவடிகளும், பவானிசாகர் தொகுதியில் 17 வாக்குச்சாவடிகளும் மலைக்கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களில் நிழற்பகுதி (ஷேடோ ஏரியா) வாக்குச்சாவடி மையங்களாக உள்ளன.
பதற்றமானவை
ஈரோடு கிழக்கு தொகுதியில் 20 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு உள்ளன.
ஈரோடு மேற்கு தொகுதியில் 39 வாக்குச்சாவடிகளும், பெருந்துறை தொகுதியில் 67 வாக்குச்சாவடிகளும், பவானி தொகுதியில் 28 வாக்குச்சாவடிகளும், அந்தியூர் தொகுதியில் 34 வாக்குச்சாவடிகளும், கோபி தொகுதியில் 66 வாக்குச்சாவடிகளும், பவானிசாகர் தொகுதியில் 19 வாக்குச்சாவடிகளும், மொடக்குறிச்சி தொகுதியில் 31 வாக்குச்சாவடிகளும் என 304 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு உள்ளன.
புகார்கள்
தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் 18004257024 மற்றும் 1950 என்ற இலவச தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இதுபோல் 0424-2257901, 2256782, 2251863, 2256524 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு புகார்கள் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை, மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன், மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் கருப்பசாமி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story