கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சேலம் அண்ணா பூங்கா விடுமுறை


கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்  சேலம் அண்ணா பூங்கா விடுமுறை
x
தினத்தந்தி 28 March 2021 3:13 AM IST (Updated: 28 March 2021 3:14 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சேலம் அண்ணா பூங்காவிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதை விதிமுறைகளுடன் மீண்டும் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம்:
கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சேலம் அண்ணா பூங்காவிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதை விதிமுறைகளுடன் மீண்டும் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்ணா பூங்கா
சேலம் மாநகராட்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பித்து மக்களின் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள அண்ணா பூங்காவில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர அனைத்து நாட்களிலும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 
அதேசமயம், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்களில் அதிகளவில் பொதுமக்கள் பூங்காவிற்கு வந்து சென்றனர். மேலும் பொதுமக்கள் பலர் முககவசம் அணியாமல் வந்ததால், கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
விடுமுறை
இதைத்தொடர்ந்து கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் நலன் கருதி, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் பூங்காவிற்கு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று அண்ணா பூங்கா மூடப்பட்டு இருந்தது.
இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் கூறுகையில், அண்ணா பூங்காவிற்கு திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை வருகை தரும் பொதுமக்கள், தவறாமல் முககவசம் அணிந்து வரவேண்டும். பூங்காவிற்குள் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பதோடு கொரோனா தடுப்பு வழிக்காட்டி நெறிமுறைகளை முறையாக பின்பற்ற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு தந்து, நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும், என்று கூறினார்.
மீண்டும் திறக்க கோரிக்கை
இனிவரும் நாட்களில் வாரத்தில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்றும், மற்ற நாட்கள் வழக்கம்போல் திறந்திருக்கும் என்ற அறிவிப்பு அண்ணா பூங்காவின் முன்பு ஒட்டப்பட்டுள்ளது. நேற்று விடுமுறை நாள் என்பதால், பூங்காவிற்கு வந்தவர்கள் இதனை பார்த்து ஏமாற்றம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி சென்றதை காணமுடிந்தது.
இதனிடையே, சேலம் மாநகரில் பொதுமக்களுக்கு அண்ணா பூங்கா மட்டுமே ஒரே பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வருகிறது. பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாலை நேரங்களில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அண்ணா பூங்காவிற்கு அழைத்து வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். ஆனால் தற்போது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அண்ணா பூங்காவுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மாநகர பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, கொரோனா வழிமுறைகளை, விதிமுறைகளை கட்டாயம் கடைபிடித்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீண்டும் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story