மேட்டுப்பாளையத்தில் 48 நாட்கள் நடந்த முகாம் நிறைவு; யானைகள் மீண்டும் கோவில்களுக்கு புறப்பட்டன
மேட்டுப்பாளையத்தில் 48 நாட்கள் நடந்த முகாம் நிறைவு பெற்றதால்,புத்துணர்வு பெற்ற யானைகள் மீண்டும் கோவில்களுக்கு புறப்பட்டன. பிரிவதை நினைத்து துதிக்கையால் உரசியவாறு அன்பை வெளிப்படுத்தின.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள திருக்கோயில்கள் மற்றும் திருமடங்களைச் சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் 13-வது யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த பிப்ரவரி மாதம் 8-ந் தேதி தொடங்கி மார்ச் மாதம் 27-ந் தேதி வரை 48 நாட்கள் நடைபெற்றது.
முகாமில் தமிழகத்திலுள்ள திருக்கோவில்கள் மற்றும் திருமடங்களைச் சேர்ந்த 24 யானைகளும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் இருந்து 2 யானைகளும் ஆக மொத்தம் 26 யானைகள் கலந்துகொண்டன.
முகாமில் கலந்துகொண்ட யானைகளுக்கு காலை, மாலை இரண்டு வேளையும் யானையின் வயது, உடல் எடைக்கு ஏற்றாற்போல் நடைப்பயிற்சி மற்றும் ஆற்றின் கரையோரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குளியல் மேடை மற்றும் ஷவர் மேடைகளில் பாகன்கள் யானைகளை குளிக்க வைத்தனர். ஜில்லென்று பாய்ந்தோடி வரும் பவானி ஆற்று நீரில் யானைகள் ஆனந்தமாக குளித்து விளையாடி மகிழ்ந்தன.
அதன் பின்னர் யானைகளுக்கு அரிசி சாதம், ராகி, பாசிப்பயிறு கொள்ளு, உப்பு, மஞ்சள், கருப்பட்டி ஆகியவை கலந்த சமச்சீர் உணவு வகைகளும் அஷ்ட சூரணம், லேகியம், லீவ்-52 புரோட்டின் வைட்டமின் மினரல் மிக்ஸர் ஆகிய மருந்து வகைகளும் 48 நாட்களும் காலை மாலை இரண்டு வேளையும் வழங்கப்பட்டது.
மேலும் முகாமில் உள்ள யானைகளுக்கு கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப்படி பசுந்தீவனங்கள், கரும்பு பசும்புல்,சோளத்தட்டு, கூந்தப்பனை, தென்னை மட்டை ஆகியவையும் கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், வெள்ளை பூசணி முலாம்பழம், தர்பூசணி,பேரிச்சம்பழம் ஆகிய வழங்கப்பட்டு வந்தன.
முகாம் நிறைவு நாளான நேற்று அனைத்து யானைகளும் புத்துணர்வு பெற்ற நிலையில் தங்களது கோவில்களுக்கு புறப்பட தயாராக அணிவகித்து நிறுத்தப்பட்டன. 48 நாட்கள் முகாமில் யானைகள் நட்புடன் பழகியதால், பிரிந்து செல்லும் தருணம் வந்தபோது பிரிய முடியாமல், பிரிவதை நினைத்து தங்களது துதிக்கையால் ஒன்றை ஒன்று தொட்டு, உரசி அன்பை வெளிப்படுத்தின.
சில யானைகள், இதுதான் இனி எப்போது சந்திப்போமோ என்பது போன்று ஒன்றுடன் ஒன்று பிரியாமல் விளையாடின. பாகன்களும் சக பாகன்களுடன் பழகியதை நினைத்து நட்பில் உறைந்தனர். அதன் பின்னர் கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில் வேலவன் வரிசையில் அணிவகுத்து நின்ற யானைகளுக்கு கரும்பு அன்னாசி, ஆப்பிள்,தர்ப்பூசணி,வாழைப்பழம்,உருண்டை வெல்லம் ஆகியவற்றை வழங்கி வழியனுப்பி வைத்தார்.
அதன் பின்னர் யானைகளை லாரிகளில் ஏற்றும் நிகழ்ச்சி தொடங்கியது. வளாகம் மற்றும் கோவில் பின்புறமுள்ள வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சாய்வு தளம் மேடைகளில் லாரிகள் நிறுத்தப்பட்டு யானைகள் லாரியில் ஏற்றப்பட்டன. பின்னர் அந்தந்த கோவில்களுக்கு யானைகள் புறப்பட்டு சென்றன.
நிறைவு நாளான நேற்று முகாமில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு வரிசையாக அணிவகுத்து நின்ற யானைகள் லாரியில் ஏற்றப் படுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
நிகழ்ச்சியில் மண்டல உதவி வனப்பாதுகாவலர் செந்தில்குமார், மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் பழனி ராஜா, கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் பெருமாள்சாமி, துணை இயக்குனர் டாக்டர் ராகவன் அரசு வன கால்நடை மருத்துவர் சுகுமாரன் முதுமலை வன கால்நடை மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை உதவி, கூடுதல் ஆணையர்கள் செயல் அலுவலர்கள்மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story