வேட்பாளர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் - ஊட்டியில் நடந்தது
பதற்றமான வாக்குச்சாவடிகள் தொடர்பாக வேட்பாளர்களிடம் கருத்து கேட்பு கூட்டம், ஊட்டியில் நடைபெற்றது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பதற்றமான வாக்குச்சாவடிகள் தொடர்பாக வேட்பாளர்கள் மற்றும் முகவர்களிடம் கருத்து கேட்பு கூட்டம், ஊட்டியில் உள்ள தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். தேர்தல் பொது பார்வையாளர்கள் ராகுல் திவாரி, பனுதர் பெஹரா, சவ்ரவ் பஹரி, காவல்துறை பார்வையாளர் ரஞ்சித்குமார் மிஸ்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசும்போது கூறியதாவது:-
ஊட்டி, குன்னூர், கூடலூர் 3 சட்டமன்ற தொகுதிகளில் 868 வாக்குச்சாவடிகள் உள்ளது. இதில் ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 32 வாக்குச்சாவடிகள், கூடலூர் சட்டமன்ற தொகுதியில் 49 வாக்குச்சாவடிகள், குன்னூர் சட்டமன்ற தொகுதியில் 31 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 112 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு உள்ளது.
தேர்தல் ஆணைய அறிவுரைப்படி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களிடம் பொது பார்வையாளர்கள், காவல்துறை பார்வையாளர் முன்னிலையில் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம்.
சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பதற்றமான வாக்குச்சாவடிகள் தொடர்பாக கட்சி பிரமுகர்களுடன் கூட்டம் நடத்தி பட்டியல் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளும் வெப்கேமரா மூலம் பதிவு செய்யப்படும்.
நுண் பார்வையாளர்கள் மூலம் வாக்குச்சாவடிகளை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நாளில் வாக்குப்பதிவுகளை சிறப்பாக மேற்கொள்ள முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மோனிகா (ஊட்டி), ரஞ்சித்சிங் (குன்னூர்), ராஜ்குமார் கூடலூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story