கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை ‘பேக்கிங்’ செய்யும் பணி மும்முரம்


கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை ‘பேக்கிங்’ செய்யும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 28 March 2021 4:52 AM IST (Updated: 28 March 2021 6:15 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி உள்பட 3 தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்க கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை ‘பேக்கிங்’ செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர்(தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. 

அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு கிடங்கில் வைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் தொகுதி மற்றும் வாக்குச்சாவடிகள் வாரியாக அங்கு அனுப்பி வைக்க பாதுகாப்பு உபகரணங்களை பிரித்து ‘பேக்கிங்’ செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

ஒரு வாக்குச்சாவடியில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்படுத்த முழு பாதுகாப்பு கவச உடை, கிருமிநாசினி, தெர்மல் ஸ்கேனர், முககவசம் உள்பட 13 வகையான கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

இதனை சுகாதாரத்துறை பணியாளர்கள் வாக்குச்சாவடி வாரியாக பிரித்து அட்டை பெட்டியில் வைத்து ‘பேக்கிங்’ செய்து வருகின்றனர். ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 தொகுதிகளுக்கும் தனித்தனியாக பேக்கிங் செய்து அறைகளில் தயாராக வைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு தெர்மல் ஸ்கேனர், கிருமிநாசினி 500 மில்லி லிட்டர் 7 பாட்டில்கள், 100 மில்லி லிட்டர் 11 பாட்டில்கள், 1,200 கையுறைகள், தேர்தல் பணியாளர்கள் பயன்படுத்தும் முககவசம் மற்றும் பிரத்தியேக முககவசம், வாக்காளர்கள் பயன்படுத்தும் கையுறைகள் மற்றும் அதனை அப்புறப்படுத்த பிளாஸ்டிக் வாளி, உப்பு கரைசல் போன்றவை அனுப்பப்பட உள்ளது.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா 2 பணியாளர்கள் கூடுதலாக பணிபுரிகின்றனர். அவர்கள் வாக்காளர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்று தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டு கிருமிநாசினி வழங்குகின்றனர். 

ஒரு கைக்கு கையுறை வழங்கி ஓட்டு போட அனுமதிக்கின்றனர். ஒருமுறை பயன்படுத்தும் கையுறைகள், முழு பாதுகாப்பு கவச உடைகள் போன்றவற்றை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த பிளாஸ்டிக் வாளியுடன் கூடிய கவர் வழங்கப்படுகிறது. 

நாளை (திங்கட்கிழமை) முதல் தொகுதி வாரியாக 868 வாக்குச்சாவடிகளுக்கும் அவற்றை அனுப்பும் பணி தொடங்குகிறது என்றனர்.


Next Story