கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் பெண் கைது
சேவூர் அருகே கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சேவூர்
சேவூர் அருகே கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொழிலாளி கொலை
திருப்பூர் மாவட்டம், அவினாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொங்கலூர் ஊராட்சி தாசராபாளையம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி கடந்த 5 மாதமாக நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமானப்பணிகளில் 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் உள்பட வெளி மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், அப்பகுதியிலேயே தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளியான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தசொ மார்டி (வயது 44) என்பவர் நேற்று முன்தினம் காட்டுப்பகுதியில் தலையில் காயம்பட்ட நிலையில் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.
பெண் கைது
இது குறித்த புகாரின் பேரில் சேவூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப்பணியில் ஈடுபட்டு வரும் 10-க்கு மேற்பட்ட தொழிலாளர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், அடித்து கொலை செய்யப்பட்ட தசொமார்டி மற்றும் அவருடன் பணியாற்றும் 2 பேர் ஒன்று சேர்ந்து மது அருந்தி விட்டு, தங்களுடன் பணியாற்றி வரும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 45 வயது பெண்ணை சம்பவத்தன்று இரவு கற்பழிக்க முயன்றதும், இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், தசொமார்டினை கல்லால் தலையில் தாக்கி கொலை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சேவூர் போலீசார், அந்த பெண்ணை கைது செய்து மேலும் 2 பேரை தேடிவருகின்றனர். இது தொடர்பாக அங்கு பணிபுரியும் தொழிலாளர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story