பத்மநாபபுரம் தொகுதியில் விஜய் வசந்த், மனோ தங்கராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு; அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்படும் என வாக்குறுதி
பத்மநாபபுரம் தொகுதியில் நாடாளுமன்ற வேட்பாளர் விஜய் வசந்த், பத்மநாபபுரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மனோ தங்கராஜ் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
பேச்சிப்பாறையில் பிரசாரம்
பத்மநாபபுரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மனோதங்கராஜ், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் விஜய் வசந்த் ஆகியோர் நேற்று காலை பேச்சிப்பாறையில் இருந்து பிரசாரத்தை தொடங்கினர். அவர்கள் திறந்த வாகனத்தில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர்.
அப்போது, மனோ தங்கராஜ் பேசியதாவது:-
தமிழகத்தில் 10 ஆண்டுகளாக அவல ஆட்சி நடைபெறுகிறது. இதனை தூக்கி எறிய மக்கள் சபதம் எடுத்துள்ளனர். நாங்கள் பிரசாரத்துக்கு செல்லும் எல்லா இடங்களிலும் இதை காணமுடிகிறது. இந்த மிகப்பெரிய எழுச்சியால் ஆட்சி மாற்றம் ஏற்பட போகிறது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி கலைஞரின் பொற்கால ஆட்சி மீண்டும் உருவாகும். அப்போது மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ முடியும். தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ஆவின் பால் விலை குறைக்கப்படும். பெட்ரோல், டீசல் வரியை குறைத்து விலையை குறைப்போம். அரசு வேலைகளில் பெண்களுக்கு 40 சதவீதம் ஒதுக்கீடு, நகர பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை என எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
ரப்பர் கழக தொழிலாளர்கள்
நமது மாவட்டத்தில் கடுமையாக உழைத்து அரசுக்கு லாபம் ஈட்டி தரும் அரசு ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் சலுகைகள் வழங்கப்படாமல் உள்ளது. தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அவர்களின் நலன் காக்கப்பட்டு, உரிமைகளை சரி செய்வோம். இதற்கு நீங்கள் சட்டமன்ற தேர்தலில் எனக்கு (மனோதங்கராஜ்) உதய சூரியன் சின்னத்திலும், நாடாளுமன்ற இடைதேர்தலுக்கு விஜய்வசந்துக்கு கை சின்னத்திலும் வாக்களித்து அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
234 தொகுதியிலும் வெற்றி
தொடர்ந்து நாடாளுமன்ற இடை தேர்தலில் போட்டியிடும் விஜய் வசந்த் பேசுகையில், தமிழகத்தில் அமைந்துள்ளது வெற்றி கூட்டணி. இது கருத்து கணிப்புகள் கூறுவது போன்று 200 தொகுதி என்றில்லாமல் 234 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடும். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எனது தந்தை வசந்தகுமார் குமரி மாவட்டத்தின் வளர்ச்சி குறித்து பெரிய கனவு கண்டிருந்தார். அவரது கனவை நான் நிறைவேற்றுவேன். அவர் விட்டு சென்ற பணிகளை நான் தொடர எனக்கு கை சின்னத்திலும், தமிழகத்தில் நல்லாட்சி அமைய மனோதங்கராஜ்க்கு உதய சூரியன் சின்னத்திலும் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தின் போது பொதுமக்கள் ஆங்காங்கே திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர்.
Related Tags :
Next Story