மதுரை வடக்கு தொகுதியில் அரசு சேவைகளை எளிதாக பெறுவதற்கு ஒவ்வொரு வார்டிலும் ஒரு இ-சேவை மையம்; தி.மு.க. வேட்பாளர் கோ.தளபதி உறுதி
மதுரை வடக்கு சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் கோ.தளபதி தொகுதி முழுவதும் தீவிர சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
காலை முதல் மாலை வரை மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தப்படி உள்ளன. அவர் செல்லும் இடங்களில் பெண்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். நேற்று கோ.தளபதி 40 மற்றும் 41வது வார்டு பகுதிக்குட்பட்ட இடங்களில் வாக்கு சேகரித்தார்.
பிரசாரத்தின் போது கோ.தளபதி பேசியதாவது:
மதுரை வடக்கு தொகுதி மக்களுக்கு இந்த தேர்தல் மூலம் விடிவு காலம் பிறக்க போகிறது. அடிப்படை வசதிகள், அரசு சேவைகள் என எதுவும் கிடைக்காமல் இருந்த இந்த பகுதி மக்களுக்கு இனி அதில் இருந்து விமோசனம் கிடைக்க உள்ளது. இந்த வடக்கு தொகுதியில் மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து திசைகளிலும் உதயசூரியன் உதிக்க போகிறது. இருள் அகண்டு, தமிழக மக்களின் வாழ்க்கை ஏற்றம் பெற போகிறது. நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் ஸ்டாலின் தான் அடுத்த முதல்அமைச்சர் என மகிழ்ச்சியுடன் சொல்வதை கேட்கும் போது எனது வெற்றியும் உங்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கு பணியாற்ற எனக்கு வாய்ப்பு தர வேண்டும்.
அரசு துறைகளின் சான்றிதழ்கள் பெறுவதற்கு இசேவை மையத்திற்கு தான் செல்ல வேண்டி உள்ளது. ஆனால் இந்த வடக்கு தொகுதி மக்களுக்கு என்று 2 இசேவை மையங்கள் தான் உள்ளன. அங்கு எந்த வசதியும் இல்லை. கூட்டம் அதிகம் இருப்பதால் சான்றிதழுக்கு காலையில் விண்ணப்பிக்க போனால் மாலை வரை ஆகி விடுகிறது.அதனால் மக்களின் ஒரு நாள் வேலை கெட்டு போய் வருமான இழப்பு ஏற்படுகிறது. இந்த நிலை முற்றிலும் மாற்றப்படும். வடக்கு தொகுதி மக்களுக்காக ஒவ்வொரு வார்டிலும் ஒரு இசேவை மையம் தொடங்கப்படும். அதன் மூலம் அரசின் சேவைகளை பொதுமக்கள் எளிதாகவும், விரைவாகவும் பெற முடியும்.இந்த வார்டில் உள்ள பந்தல்குடி கால்வாயில் தடுப்பு சுவர் கட்டி தண்ணீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். நரிமேடு பகுதியில் பாதாள சாக்கடை நீர் தேங்காமல் இருக்க திட்டமிடப்படும். கிருஷ்ணாபுரம், சொக்காநாதபுரம் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு சரி செய்யப்படும். ரேஷன் கடைகளில் அனைத்து நாட்களிலும் பொருட்கள் வழங்கப்படும்.
அதே போல் திருட்டு மற்றும்சமூக விரோத செயல்களை தடுப்பதற்கு வார்டுகளில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்படும்.அதே போல் இந்த வார்டு பகுதிகளில் குப்பைகள் தினமும் சுத்தம் செய்யப்படாத நிலை உள்ளது. அதனை மாற்றி தினமும் குப்பைகள் சரியாக அள்ளப்படும். நான் அளிக்கும் அனைத்து
வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன். எனவே மண்ணின் மைந்தனான எனக்கு பொதுமக்கள் முழு ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story