கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க பயிற்சி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்களிப்பது குறித்து செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்களிப்பது குறித்து செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி தொகுதிகளில் வருகிற 6-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திர பானு ரெட்டி மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பார்வைற்ற மாற்றுத்திறனாளிகள் பிரெய்லி முறையில் வாக்களிப்பது குறித்து செயல்முறை விளக்க பயிற்சி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ் தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் முன்னிலை வகித்தார். இதில் பார்வைற்ற மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பிரெய்லி முறையில் வாக்களிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
100 சதவீதம் வாக்களிப்பு
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பேசுகையில், பார்வைத்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி வாக்குச்சீட்டு ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் உள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிப்பதற்கு ஏதுவாக கைப்பிடியுடன் கூடிய சாய்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமுமின்றி 100 சதவீதம் வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பேசினார்.
Related Tags :
Next Story