நிதி நிறுவன அதிபரிடம் ரூ.46½ லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது


நிதி நிறுவன அதிபரிடம் ரூ.46½ லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 March 2021 6:43 AM IST (Updated: 28 March 2021 6:43 AM IST)
t-max-icont-min-icon

வாகனங்களின் பதிவு புத்தகங்களை அடகு வைத்து நிதி நிறுவன அதிபரிடம் ரூ.46½ லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை

வாகனங்களின் பதிவு புத்தகங்களை அடகு வைத்து நிதி நிறுவன அதிபரிடம் ரூ.46½ லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நிதி நிறுவன அதிபர்

கோவை துடியலூரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 48). இவர் மகேஸ்வரி அசோசியேட்ஸ் என்ற பெயரில் துடியலூரில் நிதிநிறுவனமும், அதே மகேஸ்வரி கார்ஸ் என்ற பெயரில் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வருகிறார். 

அவருடைய நிறுவனத்தில் இடையர்பாளையம் குமரன் வீதியை சேர்ந்த ஜெகநாதன் (38), வடவள்ளியை சேர்ந்த சுரேஷ் (29) ஆகியோர் பழைய வாகனங்களுக்குரிய பதிவு புத்தகங்களை (ஆர்.சி.புக்) அடமானமாக வைத்து லட்சக்கணக்கில் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.

மேலும் அதே பதிவு புத்தகங்களின் நகலை ஜெகநாதன் மற்றும் சுரேஷ் ஆகியோர் நடத்தி வரும் நிறுவனத்தின் பெயரில் வைத்து மற்றொரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று உள்ளனர்.

2 பேர் கைது

இது கார்த்திக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் ஜெகநாதன், சுரேஷ் ஆகியோரிடம் பதிவு புத்தகங்களை பெற்றுக்கொண்டு வாங்கி பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர்கள் உரிய பதில் அளிக்காமல் இருந்து வந்தனர்.

இதுகுறித்து கார்த்திக் கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், அவர்கள் 2 பேரும் கார்த்திக்கிடம் ரூ.46 லட்சத்து 61 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது.

 இதையடுத்து ஜெகநாதன், சுரேஷ் ஆகியோரை போலீசார் கைதுசெய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story