திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்; திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
திருப்பட்டூர் பிரம்ம புரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.
திருப்பட்டூர் பிரம்ம புரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.
பிரம்மபுரீஸ்வரர் கோவில்
சமயபுரம் அருகே திருப்பட்டூரில் உள்ள பிரம்ம சம்பத்கவுரி, பிரம்மபுரீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தலையெழுத்தையே மாற்றி அமைக்கும் வல்லமைபடைத்த இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தேர்திருவிழா நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்தஆண்டு தேர்திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.அன்று முதல் தினமும் காலை 10 மணிக்கு சுவாமி பல்லக்கிலும், இரவு பூதவாகனம், மயில்வாகனம், கைலாசவாகனம், அன்னவாகனம், சேஷவாகனம் ஆகிய வாகனங்களில்புறப்பாடு நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு சாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலை வலம்வந்து வையாளி கண்டருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தேரோட்டம்
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது.இதையொட்டி காலை 7.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் முதல் தேரிலும், பிரம்மசம்பத்கவுரி, பிரம்மபுரீஸ்வரர், சோமாஸ்கந்தர் ஆகிய சாமிகள் இரண்டாவது தேரிலும், அதைத்தொடர்ந்து சண்டிகேஸ்வரர் 3-வது தேரிலும் எழுந்தருளினர். அதைத்தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, வாணவெடிகள் வெடிக்க 8.45 மணிக்கு திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் ரதவீதிவழியாக வலம்வந்து நிலையை அடைந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் போலீசார் மேற்கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முத்துராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story