தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி; கலெக்டர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தார்
திருவண்ணாமலை கிரிவலப்பாைதயில் தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சியை கலெக்டர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கிரிவலப்பாைதயில் தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சியை கலெக்டர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தார்.
தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி
திருவண்ணாமலை கிரிவலப்பாதை காஞ்சி சாலை, அபயமண்டபம் எதிரில் அமைந்துள்ள ‘நம்ம திருவண்ணாமலை செல்பி புகைப்படம்’ எடுக்கும் இடம் அருகில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உற்பத்தியாகும் பல்வேறு பொருட்களை கொண்டு மகளிர் திட்டம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சியை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதில் வாழைப்பழம், வாழை நாரினால் செய்யப்பட்ட சாவிக்கொத்து, உப்பு, தக்காளி, கத்தரிக்காய், மிளகாய் மற்றும் நாத்துகள் கொண்டு இந்திய வரைபடம் ஆகிய தேர்தல் விழிப்புணர்வு கோலங்கள் வரையப்பட்டிருந்தது.
மேலும் அப்பளம், பாய்கள், கரும்பு மற்றும் எலுமிச்சை மூலம் 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தும் வண்ணக் கோலங்களும் வரையப்பட்டிருந்தது.
மாணவிக்கு பாராட்டு
நிகழ்ச்சியில் 4-ம் வகுப்பு பயிலும் மாணவி சாத்விகா தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளின் பெயர்களை சட்டமன்ற தொகுதி வாரியாக எந்தவித குறிப்பும் இல்லாமல் வாசித்து காண்பித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அவருக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்து சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.
மேலும் தேர்தல் பணியில் சிறப்பாக பணியாற்றிய கல்லூரி தேர்தல் பொறுப்பாளர்களான மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
மாவட்டத்தில் கடந்த தேர்தல்களில் குறைந்த வாக்குகள் பதிவான வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு 100 சதவீத வாக்களிப்போம், தேர்தல் நாள் ஏப்ரல் 6 என்பதை வலியுறுத்தும் நேரடி தபால் அட்டை வெளியிட்டார்.
விழிப்புணர்வு தபால் அட்டைகள்
மாவட்டத்தில் கடந்த தேர்தல்களில் 136 வாக்குச்சாவடிகளில் குறைந்தளவு வாக்குகள் பதிவாகி உள்ளது.
இந்த வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட வாக்காளர்களின் 1 லட்சம் வீடுகளுக்கு கலெக்டரின் பெயரில் 100 சதவீத வாக்களிப்போம், ஏப்ரல் 6 அனைவரும் தவறாமல் வாக்களிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்ற வாசகங்களுடன் தேர்தல் விழிப்புணர்வு தபால் அட்டைகள் வழங்குவதற்கு அஞ்சல் பணியாளர்களிடம் கலெக்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சந்திரா, திருவண்ணாமலை தலைமை தபால் அலுவலக கண்காணிப்பாளர் அமுதா மற்றும் அஞ்சல் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story