தூத்துக்குடி கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி


தூத்துக்குடி கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி
x
தினத்தந்தி 28 March 2021 5:27 PM IST (Updated: 28 March 2021 5:27 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி நடந்தது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி நேற்று நடந்தது.
தவக்காலம்
கிறிஸ்தவ மக்கள் ஆண்டு தோறும் ஏசுவின் சிலுவை பாடுகளை நினைவுகூறும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி சாம்பல் புதன் வழிபாட்டுடன் தொடங்கியது. தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. புனித வாரத்தின் தொடக்க நாளான ஞாயிற்றுக்கிழமை குருந்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது. ஏசு கிறிஸ்து தனது சீடர்களுடன் ஜெருசலேம் நகருக்குள் நுழைந்த போது மக்கள் ஆலிவ் இலைகளை கையில் ஏந்தி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து உள்ளனர். அதனை நினைவு கூறும் வகையில் குருத்தோலை பவனி நடக்கிறது. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக குருத்தோலை பவனி நடைபெறவில்லை. இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கில் தளர்வு காரணமாக கிறிஸ்தவ தேவாலயங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் குருத்தோலை பவனி நேற்று நடந்தது.
குருத்தோலை பவனி
தூத்துக்குடி திரு இருதய பேராலயத்தில் (சின்னக்கோவில்) நடைபெற்ற குருத்தோலை பவனிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்கினார். ஆலயத்தை சுற்றி முக்கிய வீதிகள் வழியாக பவனி நடந்தது. தொடர்ந்து பிஷப் தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதே போன்று தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் பங்குத்தந்தை குமார் ராஜா தலைமையில் குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு திருப்பலி நடந்தது.
தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஆன்றனி புருனோ தலைமையிலும், தாளமுத்துநகர் மடுஜெபமாலை ஆலயத்தில் பங்குதந்தை நெல்சன்ராஜ் தலைமையிலும், ஆரோக்கியபுரம் புனித ஆரோக்கியநாதர் ஆலயத்தில் உதவி பங்குத்தந்தை ஸ்டீபன் மரியதாஸ் தலைமையிலும் குருத்தோலை பவனி நடந்தது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர். இதே போன்று மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி, பிரார்த்தனை நடந்தது.
ஈஸ்டர்
தவக்காலத்தில் வரும் வாரம் முழுவதும் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 1-ந் தேதி (வியாழக்கிழமை) புனித வியாழனை முன்னிட்டு ஏசு கிறிஸ்து தமது சீடர்களின் பாதங்களை கழுவும் நிகழ்வை நினைவுகூறும் வகையில் பாதம் கழுவும் நிகழ்ச்சி கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் நடக்கிறது. 2-ந் தேதி புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவை பாதை வழிபாடுகள் நடக்கிறது. 3-ந் தேதி நள்ளிரவு ஈஸ்டர் சிறப்பு வழிபாடுகளும், 4-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.

Next Story