விழுப்புரம் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா
விழுப்புரம் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே அகரம்பாட்டை முத்தோப்பில் உள்ள பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணிக்கு சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
காலை 10 மணிக்கு வெற்றிவேல் வீதியுலாவும், 11.30 மணிக்கு செடல் உற்சவமும், 12.30 மணிக்கு கற்பூர அபிஷேகமும் நடந்தது.
இவ்விழாவில் வெற்றிவேலை தூக்கி வந்த பக்தர்கள் சிலரின் உடல் முழுவதும் மிளகாய்பொடி கரைசலை ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, நடந்த சிறப்பு தீபாராதனையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பூந்தோட்டம்
இதேபோல் விழுப்புரம் பூந்தோட்டம் கீழ்வன்னியர் தெரு முத்துமாரியம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கும், விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள இந்திரா நகர் பாலமுருகன் கோவில், விழுப்புரம் அரசு மருத்துவமனை அருகில் உள்ள முருகன் கோவில், ரெயில்வே மேம்பாலம் அருகில் உள்ள பாலமுருகன் கோவில் உள்ளிட்ட விழுப்புரம் பகுதியில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
மேல்மலையனூர்
மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டையில் பிரசித்திபெற்ற ஸ்ரீ சித்தகிரி முருகன் கோவில் உள்ளது. இங்கு பங்குனி உத்திர விழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.
பங்குனி உத்திரமான நேற்று வள்ளிதெய்வானை சமேத ஸ்ரீ முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் முதுகில் அலகு குத்தி சிறிய வகை தேர்களை இழுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சிலர் வேன், டிராக்டர் ஆகியவற்றை இழுத்தும் அதன் மீது தொங்கியவாறும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் சிறிய வேல்களை உடல்களிலும், முகத்திலும் குத்தியவாறு அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் ஊர்வலமாக சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் விழாக்குழுவினர், கிராம மக்கள் ஆகியோர் செய்திருந்தனர். அவலூர்பேட்டை சப்- இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் மேல்மலையனூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சாமளவண்ணன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தொரப்பாடி
இதேபோல் மேல்மலையனூர் அருகே தொரப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசண்முகவடிவேலன் கோவில், மேல்மலையனூர் அருகே தாயனூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீபாலசுப்பிரமணியசுவாமி கோவில், கீழ் செவளாம்பாடி வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகப்பெருமான் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story