பாதை வசதி கேட்டு வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்
குஜிலியம்பாறை அருகே பாதை வசதி கேட்டு வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்
குஜிலியம்பாறை:
குஜிலியம்பாறை ஒன்றியம், சின்னுலுப்பை ஊராட்சி சி.அம்மாபட்டிக்கு தெற்கே இந்திரா காலனி உள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த காலனிக்கும், சி.அம்மாபட்டிக்கும் இடையே கடந்த 1988-ம் ஆண்டு ரெயில்வே தண்டவாள பாதை அமைக்கப்பட்டது. இதன் காரணமாக இந்திரா காலனி மக்கள் நடந்து செல்வதற்கு முறையான பாதை வசதி இல்லாமல் இருந்தது. அவர்கள் ரேஷன் கடைக்கு செல்வதற்கும், குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கும் ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலை இருந்தது. மேலும் துக்க சம்பவங்களின் போது கூட, தண்டவாளத்தை கடந்து தான் பிணத்தை கொண்டு செல்லும் நிலை இருந்தது. எனவே பாதை வசதி கேட்டு குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம் மற்றும் சின்னுலுப்பை ஊராட்சி நிர்வாகத்திடம் பல ஆண்டுகளாக இந்திரா காலனி மக்கள் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த இந்திரா காலனி மக்கள் நேற்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் வீடுகளில் கருப்பு கொடியை கட்டி போராட்டம் நடத்தினர். மேலும் தேர்தலை புறக்கணிப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, தேர்தல் புறக்கணிப்பு கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story