தூக்கில் பிணமாக தொங்கிய காதல் ஜோடி: கொலை வழக்காக பதிய கோரி வாலிபரின் உறவினர்கள் சாலை மறியல் திண்டிவனத்தில் பரபரப்பு


தூக்கில் பிணமாக தொங்கிய காதல் ஜோடி: கொலை வழக்காக பதிய கோரி வாலிபரின் உறவினர்கள் சாலை மறியல் திண்டிவனத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 28 March 2021 11:02 PM IST (Updated: 28 March 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் தூக்கில் பிணமாக காதல் ஜோடி தொங்கிய வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி வாலிபரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டிவனம், 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள இறையானூர் காலனி ஆதிபராசக்தி கோவில் தெருவை சேர்ந்தவர் மகாதேவன். இவரது மகன் அருணாசலம் என்கிற ராமஜயெம் (வயது 18). பிளஸ்-2 படித்து முடித்த இவருக்கும், எதிர் வீட்டை சேர்ந்த பாவாடை ராயன் மகள் அபிநயா (16) என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

அருணாசலத்துக்கு அபிநயா  தங்கை உறவு என்பதால் இருவரது வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  இந்த நிலையில் ராமஜெயம், அபிநயா ஆகியோர் கடந்த 25-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், நேற்று முன்தினம்  திண்டிவனம் கர்ணாவூர்பாட்டை ஓடைப்பகுதியில் உள்ள புளிய மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர்.

உடலை வாங்க மறுப்பு

இருவரின் உடலையும் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த திண்டிவனம் போலீசார், இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  பிரேத பரிசோதனை முடிவடைந்த  நிலையில் அபிநயாவின் உடலை அவரது உறவினர்கள் பெற்று சென்றனர். ஆனால். அருணாசலத்தின் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்துவிட்டனர்.

சாலை மறியல்

இதற்கிடையே,  இருவரையும் பெண்ணின் உறவினர்கள் கொலை செய்துள்ளதாகவும், எனவே இதை கொலை வழக்காக மாற்றி, இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறி அருணாசலத்தின் உறவினர்கள் திண்டிவனம் ஜக்காம்பேட்டை புறவழிச்சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர்.

தகவல் அறிந்த   துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திண்டிவனம் கணேசன்,  கோட்டக்குப்பம் அஜய்தங்கம், திண்டிவனம் இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பிரேத பரிசோதனை முடிவு

அதில் பிரேத பரிசோதனை முடிவுகள் வந்தவுடன், அதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 

சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த மறியலால், விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story