திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் நடைபெற்ற தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர்.


திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் நடைபெற்ற தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர்.
x
தினத்தந்தி 28 March 2021 11:14 PM IST (Updated: 28 March 2021 11:14 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் நடைபெற்ற தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர்.

திருக்கோவிலூர்

பங்குனி பிரம்மோற்சவம்

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் காலை, மாலையில் ஹம்ச வாகனம், யாழி, சிம்மம், ஹனுமந்த, சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா வந்தார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் தேர் திருவிழா கோவில் மடாதிபதி ஜீயர் சாமிகள் முன்னிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து வீதிஉலாவை தொடங்கி வைத்தனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா! கோவிந்தா! என கோஷம் எழுப்பினர். தொடர்ந்து கிழக்கு வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக சென்று மீண்டும் கிழக்கு வீதியில் தேர் நிலைக்கு வந்து நின்றது.

மட்டையடி உற்சவம்

விழாவில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு நீர்,மோர் பிரசாதங்கள் அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டன. விழாவையொட்டி திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

தொடர்ந்து மாலையில் சாமிக்கு தீர்த்தவாரி மற்றும் சாற்றுமறை நிகழ்ச்சியும் இரவு அவரோகணம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று(திங்கட்கிழமை) காலை தங்கப் பல்லக்கு நிகழ்ச்சி, தொடர்ந்து மட்டையடி உற்சவம், மாலை புஷ்பயாகமும், இரவு சப்தாவரணமும் நடைபெற உள்ளது.

தெப்ப உற்சவம்

வருகிற 30-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) காலை விடையாற்றி உற்சவமும், அதைத் தொடர்ந்து ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ ராகவேந்திரர் மடம் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மண்டகப்படியும், இரவு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ தேகளிசபெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 

பின்னர் வருகிற 31-ந் தேதி(புதன்கிழமை) காலை விடையாற்றி நிகழ்ச்சியும், இரவு ஸ்ரீ சீதா லக்ஷ்மண ஹனுமத் சமேத ஸ்ரீ ராமபிரான் எழுந்தருளும் தெப்ப உற்சவமும், தொடர்ந்து வருகிற 1-ந் தேதி(வியாழக்கிழமை) காலை விடையாற்றி நிகழ்ச்சியும், ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபாலன் எழுந்தருளும் தெப்ப உற்சவ நிகழ்ச்சியும் நடக்கிறது. 

விழா ஏற்பாடுகளை கோவில் மடாதிபதி ஜீயர் சாமிகள் மேற்பார்வையில் தேவஸ்தான ஏெஜன்டு ஸ்ரீ கிருஷ்ணன் தலைமையில் விழாக் குழுவினர் உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


Next Story