ஆறு, ஏரி, குளங்களை தூர்வாருவதற்கு பதிலாக கஜானாவை தூர்வாரி விட்டார்கள் மடத்துக்குளத்தில் டி.டி.வி.தினகரன்
ஆறு, ஏரி, குளங்களை தூர்வாருவதற்கு பதிலாக கஜானாவை தூர்வாரி விட்டார்கள் என்று மடத்துக்குளத்தில் டி.டி.வி.தினகரன் கூறினார்.
போடிப்பட்டி
ஆறு ஏர, குளங்களை தூர்வாருவதற்கு பதிலாக கஜானாவை தூர்வாரி விட்டார்கள் என்று மடத்துக்குளத்தில் டி.டி.வி.தினகரன் கூறினார்.
தேர்தல் பிரசாரம்
மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி அமமுக. வேட்பாளர் சி.சண்முகவேலு, உடுமலை தொகுதி வேட்பாளர் பாலு என்கிற பழனிச்சாமி ஆகியோரை ஆதரித்து மடத்துக்குளம் நால் ரோட்டில் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திறந்த வேனில் நின்றபடி பேசியதாவது
ஆளுங்கட்சியினர் தொண்டர்களையோ, கூட்டணியையோ, மக்களையோ நம்பாமல் காந்தித் தாத்தாவை மட்டுமே நம்பியுள்ளனர். மடத்துக்குளம், உடுமலை தொகுதிகளில் உங்கள் வரிப்பணம் 100 கோடிக்கு மேல் வந்து இறங்கியுள்ளது. பணத்தைக் கொடுத்து உங்களையெல்லாம் சந்தையில் வாங்குவது போல ஆடு மாடுகளைப்போல விலைக்கு வாங்கி விடலாம் என்று எண்ணியிருக்கிறார்கள். அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.
நமது கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தான் தமிழ்நாட்டிலுள்ள ஊழல் ஆட்சியை ஒழிக்க முடியும். மக்கள் விரோத ஆட்சியை ஒழிக்க முடியும். ஆட்சியாளர்கள் நடத்தும் இந்த கமிஷன் மண்டிகளை காலி செய்ய வையுங்கள். ஆட்சியாளர்கள் கமிஷன் மண்டி நடத்துவதால் ரூ. 6 லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளது. அந்த பணமெல்லாம் எங்கே போனது. அவற்றையெல்லாம் மீட்டு அரசு கஜானாவுக்குக்கொண்டு வர வேண்டியது நமது கடமை. எம்.ஜி.ஆரால் தீய சக்தி என்று அடையாளம் காட்டப்பட்ட தி.மு.க. கூட்டணி சந்தடி சாக்கில் ஆட்சிக்கு வரலாமென்று பார்க்கிறது. நாம் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித் தருவோம்.
துரோக சக்தி
இவர்களால் முதியோர் உதவித்தொகையை ஒழுங்காக கொடுக்க முடியவில்லை. இவர்கள் அறிவித்துள்ள இலவசங்களை கொடுக்க வேண்டுமானால் மாதத்துக்கு ரூ.4 ஆயிரம் கோடி, வருடத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடி வேண்டும். ஏற்கனவே ஆறு, ஏரி குளங்களைத் தூர் வாருவதற்குப் பதிலாக கஜானாவை தூர் வாரி விட்டார்கள். 10 ஆண்டுகளாக ஆட்சியிலில்லாத தி.மு.க. காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் பாய்ந்தது போல பாயத் தயாராக இருக்கிறது. அரசாங்கத்தில் ஒன்றுமில்லாத நிலையில் மக்களின் உடைமைகள் தான் பறி போகும். தீய சக்திகளையும் துரோக சக்திகளையும் ஆட்சிக்கு வர விடாமல் தடுப்பது உங்கள் கடமை.
விவசாயிகளுக்கு வீடு தேடி வந்து உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் மானியத்துடன் வழங்கப்படும். பாடுபட்டு விளைவித்த நெல் மூட்டைகளை விற்பதற்கு விவசாயிகள் படும் சங்கடங்களைப் போக்கும் வகையில் வீடுகளுக்கே சென்று நெல் கொள்முதல் செய்யப்படும். கைத்தறி நெசவாளர் அனைவருக்கும் இலவச மின்சாரம், விசைத்தறி நெசவாளர்களுக்கு 1000 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்.
தடுப்பணை
அப்பர் அமராவதி திட்டம், அமராவதி ஆற்றில் தடுப்பணைகள் கட்டுதல், ஆனைமலை நல்லாறு திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அமராவதி சர்க்கரை ஆலை புனரமைப்புக்காக ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட ரூ 25 கோடி நிதி திரும்ப அனுப்பப்பட்டுள்ளது. அந்த நிதி திரும்ப கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ 3 ஆயிரம் கரும்புக்கு டன்னுக்கு 4 ஆயிரமும் என உயர்த்தி வழங்கப்படும்.
மடத்துக்குளத்தில் பெண்களுக்கு பாலிடெக்னிக் கல்லூரி, தீயணைப்பு நிலையம், மின் மயானம் அமைத்து தரப்படும். சமீபத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட புதிய விவசாயக்கொள்கையில் நீக்கப்பட்ட விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகல்லூரி ஆசிரியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை சட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். உடுமலை தாலுகா அலுவலகத்துக்கு புதிய கட்டிடம், நிலுவையில் உள்ள பஸ் நிலைய விரிவாக்கப்பணி போன்றவற்றை நிறைவேற்றுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story