அ.தி.மு.க-தி.மு.க.வினர் இடையே மோதல்
மேட்டுப்பாளையத்தில் வாக்கு சேகரிக்க சென்ற அ.தி.மு.க தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 9 பேர் காயம் அடைந்தனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக ஏ.கே.செல்வராஜ் போட்டியிடுகிறார்.
தி.மு.க வேட்பாளராக டி.ஆர்.சண்முகசுந்தரம் போட்டியிடுகிறார். தேர்தலை யொட்டி வேட்பாளர்கள் 2 பேரும் சட்டமன்ற தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தங்களுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மேட்டுப்பாளையம்-ஊட்டி மெயின் ரோட்டில் உள்ள சி எஸ்.ஐ. தூய யோவான் ஆலயத்தில் அ.தி.மு.க.வினர் மாவட்ட பேரவை செயலாளர் நாசர், நகர செயலாளர் வான்மதி சேட் ஆகியோர் தலைமையில் கட்சி தொண்டர்களும், தி.மு.க.வினர் நகர செயலாளர் முகம்மது யூனுஸ் தலைமையில் கட்சி தொண்டர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால் சி.எஸ்.ஐ தூய யோவான் ஆலயம் முன்பு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியே திமுகவினரின் 3 எல்.இ.டி பிரசார வேன் வந்தது.
அப்போது அங்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த அ.தி.மு.க.வினர் இந்த பிரசார வேன்களுக்கு அனுமதி இல்லை என்று அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது. உடனே போலீசார் அந்த மூன்று வாகனங்களை நிறுத்தி இதற்குரிய அனுமதி பெற்றுள்ளீர்களா என்று கேட்டதாக தெரிகிறது.
அப்போது திடீரென அ.தி.மு.க- தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பிரசார வாகனத்தில் இருந்த ஸ்டாலின் தான் வாராரு விடியல் தரப்போராறு என்று ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்கள் கிழிக்கப்பட்டன.
மேலும் இரண்டு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் தி.மு.க. நகர செயலாளர் முகமது யூனுஸ், துணை செயலாளர் மனோகரன், சிராஜ்தீன், அப்பாஸ் ஆகியோர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த மோதலில் அ.தி.மு.க.வைச்சேர்ந்த மணி, கமலேஷ் குமார், ரஞ்சித் குமார், கணேசன், அஸ்வின் பாலாஜி ஆகியோரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து அ.தி.மு.க.வினர், தி.மு.க.வினர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கூட்டம், கூட்டமாக வந்து கொண்டிருந்தனர்.
இதனால்அங்கு ஒருவித பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. மருத்துவமனை முன்பு திரண்ட தி.மு.க.வனர் அ.தி.மு.க.வுக்கு எதிராக கோஷங்களை முழங்கினார்கள்.உடனே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினார்கள்.
ஆனால் அ.தி.மு.வினர், தி.மு.க.வினர் தொடர்ந்து மருத்துவ மனைக்குவந்து கொண்டிருந்ததால் போலீசார் மருத்துவமனையின் நுழைவு வாயிலை மூடி மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story