ஓவேலி செந்தூர் முருகன் கோவிலில் பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
ஓவேலி செந்தூர் முருகன் கோவில் திருவிழாவையொட்டி பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கூடலூர்,
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி அண்ணாநகரில் உள்ள செந்தூர் முருகன் கோவிலில் வருடாந்திர திருவிழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமமும், தொடர்ந்து கொடி ஏற்றி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் மூலவருக்கு அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இரவு 7 மணிக்கு பாரம் ஆற்றங்கரையில் இருந்து மேள-தாளங்கள் முழங்க அம்மனை குடியழைத்து கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு மாவிளக்கு பூஜையும், அதைத்தொடர்ந்து திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை மற்றும் மேள-தாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் முருகப்பெருமான் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை 6 மணிக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மதியம் 12 மணிக்கு பாரம் ஆற்றங்கரையில் இருந்து பக்தர்கள் அலகு குத்தி பறவை காவடி எடுத்து முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.
இதேபோல் பெண்களின் முளைப்பாரி ஊர்வலமும் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு பாலாபிஷேகம் உள்பட மகா அபிஷேகம், அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு முருகப்பெருமானுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.
தொடர்ந்து அம்மனை குடிவிடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story