வாக்காளர்களை அழைத்து வர வாகன வசதி
நீண்ட தொலைவில் வாக்குச்சாவடிகள் இருந்தால் வாக்காளர்களை அழைத்து வர வாகன வசதி செய்யப்படும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் அனைவரும் வாக்களிக்கும் வகையில் எல்.இ.டி. திரை கொண்ட வாகனங்கள் மூலமும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மலைப்பிரதேசம் என்பதால் மக்கள் வசிக்கும் சில இடங்களில் இருந்து அவர்களுக்கான வாக்குச்சாவடிகள் நீண்ட தொலைவில் உள்ளது. இதனால் பழங்குடியின மக்கள், தோட்ட தொழிலாளர்கள் சாலை வசதி இல்லாத இடங்களில் இருந்து அடர்ந்த வனப்பகுதி வழியாக வாக்குச்சாவடிக்கு செல்லும் நிலை உள்ளது. வனப்பகுதிகளை ஒட்டி வசிக்கும் மக்கள் வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:-
வாக்குச்சாவடியில் இருந்து நீண்ட தொலைவில் உள்ள வாக்காளர்கள் வாக்களிக்க வர ஏதுவாக வாகன வசதிகள் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தனியார் தேயிலை எஸ்டேட்டுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், வாக்களிக்க செல்லும் இடம் நீண்ட தொலைவில் இருந்தால் அவர்கள் வாக்களிக்க சென்று வருவதற்கான வாகன வசதிகளை சம்பந்தப்பட்ட தோட்ட நிறுவன உரிமையாளர்கள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
மேலும் தேர்தல் நாளில் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக தோட்ட தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுமுறை வழங்காமல் கட்டாயம் பணிக்கு வருமாறு கூறினால், இதுகுறித்து மாவட்ட கட்டுப்பாட்டு அறையை 18004250034 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
சம்பந்தப்பட்ட அலுவலர்கள் வாக்குச்சாவடியில் இருந்து நீண்ட தொலைவில் மக்கள் வசிக்கும் பகுதிகளை கண்டறிந்து, அவர்கள் தவறாமல் வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும். வருகிற தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்குகளை பதிவு செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story