திருவண்ணாமலை; விடிய, விடிய பவுர்ணமி கிரிவலம் சென்ற பக்தர்கள்


திருவண்ணாமலை; விடிய, விடிய பவுர்ணமி கிரிவலம் சென்ற பக்தர்கள்
x
தினத்தந்தி 29 March 2021 12:02 AM IST (Updated: 29 March 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் விடிய, விடிய பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்றனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் விடிய, விடிய பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்றனர். 

கொரோனா ஊரடங்கு

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. 

இக்கோவிலுக்கு பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். 

தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் ஏப்ரல் மாதத்தில் வந்த பவுர்ணமியில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் தடை விதிக்கப்பட்டு வருகிறது. 

கடந்த பிப்ரவரி மாதத்தில் வந்த பவுர்ணமியின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று அதிகாலை 3.12 மணி முதல் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 1.30 மணி அளவில் நிறைவடைந்தது. 

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

புதிய வகை கொரோனா தொற்று பரவுவதால் இந்த மாத பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல பக்தர்கள் வரவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது. 

இருப்பினும் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பகலில் வெயிலின் தாக்கத்தினால் குறைந்த அளவிலான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

மாலைக்கு மேல் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அதுமட்டுமின்றி பெரும்பாலான பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கை

கோவிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டது. 

போலீசார் கிரிவலப்பாதையில் உள்ள முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story