ஊட்டி, குன்னூரில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது


ஊட்டி, குன்னூரில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது
x
தினத்தந்தி 29 March 2021 12:31 AM IST (Updated: 29 March 2021 12:36 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி, குன்னூரில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.

ஊட்டி,

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்ததாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் கூறப்பட்டு உள்ளது. இந்த நாட்களை கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர். இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி 17-ந் தேதி முதல் தவக்காலம் தொடங்கியது. இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் தினமும் காலை, மாலை சிறப்பு பிரார்த்தனை நடந்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு எருசலேமை நோக்கி கழுதை மேல் அமர்ந்து பவனியாக சென்றார். அப்போது எருசலேம் நகரை சுற்றிலும் குருத்தோலைகளை கையில் பிடித்தபடி பாடலை பாடியவாறு சென்றனர். இது தாழ்மையின் ரூபம் என்று பைபிள் கூறுகிறது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையை கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறாக அனுசரித்து வருகின்றனர்.

பவனி

இந்த நிலையில் நேற்று நீலகிரி முழுவதும் உள்ள தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. ஊட்டி சி.எஸ்.ஐ. தூய திரித்துவ ஆலயத்தில் பங்கு தந்தை இம்மானுவேல் வேழவேந்தன் தலைமையில் குருத்தோலை ஞாயிறையொட்டி காலை 8 மணிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. பின்னர் ஆலயத்தில் இருந்து குருத்தோலை ஞாயிறு பவனி தொடங்கியது.

ஸ்டேட் வங்கி லைன், கமர்சியல் சாலை, லோயர் பஜார், மத்திய பஸ் நிலையம் வழியாக புனித தாமஸ் ஆலயம் வரை பவனி சென்றது. இதில் பங்கு தந்தை ஜெரேமியா ஆல்பிரட் மற்றும் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை குருத்தோலைகளை கையில் ஏந்தி பாடல்களை பாடியபடி சென்றனர். அவர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் சென்றார்கள்.

திருப்பலி

சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் பங்கு தந்தை ஸ்தனிஸ் பிரார்த்தனை செய்து குருத்தோலைகளை மந்திரித்து வழங்கினார். கிறிஸ்தவர்கள் ஆலய வளாகத்துக்குள் குருத்தோலைகளை ஏந்தி பவனியாக சென்றனர். பின்னர் திருப்பலி நடந்தது. இதேபோன்று சி.எஸ்.ஐ., ரோமன் கத்தோலிக்க ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.

குன்னூர் சி.எஸ்.ஐ. யோவான் ஸ்நானகன் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. ஊர்வலத்திற்கு ஆயர் ஜெபஸ்ஜான் ஆசீர் தலைமை தாங்கினார். ஊர்வலம் ஆலயத்தில் இருந்து தொடங்கி பெட்போர்ட் சர்க்கிள் வரை சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது.

பவனியில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கையில் பிடித்து பாடல்களை பாடியபடி சென்றனர். பின்னர் ஆலயத்தில் ஆராதனை நடைபெற்றது.

வெலிங்டன் நல்லப்பன் தெரு சி.எஸ்.ஐ. ஜோசப் ஆலயத்தில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனிக்கு போதக சேகர உறுப்பினர் ஜேக்கப் தலைமை தாங்கினார். பின்னர் ஆராதனையில் தேவ ஊழியர் ஜான்பீட்டர் குருத்தோலை ஞாயிறு செய்தி கொடுத்தார்.


Next Story