தாவரவியல் பூங்காவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தூய்மைப்பணி மேற்கொண்டார்
தாவரவியல் பூங்காவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தூய்மைப்பணி செய்தார்.
புதுச்சேரி,
புதுவை தாவரவியல் பூங்காவில் நடந்த தூய்மைப் பணியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார்.
தூய்மைப்பணி
கடந்த சில நாட்களுக்கு முன் தாவரவியல் பூங்காவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆங்காங்கே மரங்களின் இலைகள் உதிர்ந்து விழுந்து கிடந்தன. மேலும் பூங்காவுக்கு வருபவர்கள் விட்டுச்செல்லும் குப்பைகள் அப்புறப்படுத்தப்படாமல் அலங்கோலமாக கிடந்தன.
இதைத்தொடர்ந்து பூங்காவை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுத்தார். அதன்பேரில் என்.எஸ்.எஸ். மற்றும் தன்னார்வலர்கள் தாவரவியல் பூங்காவை நேற்று சுத்தப்படுத்தினர். இந்த பணிகளை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். அப்போது அவரும் இணைந்து சுமார் 2 மணிநேரம் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொண்டார்.
மாணவ, மாணவிகள்
துப்புரவு பணியில் ஆச்சார்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பிம்ஸ் மருத்துவக் கல்லூரி, பேட்ரிக் பள்ளி, இந்திராகாந்தி அரசு உயர்நிலைப்பள்ளி, தந்தை பெரியார் அரசு உயர்நிலைப்பள்ளி, நாவலர் நெடுஞ்செழியன் அரசு உயர்நிலைப்பள்ளி, அன்னை சிவகாமி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 140 பேர் ஈடுபட்டனர்.
அவர்கள் மத்தியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது, சமுதாயம் மற்றும் நாட்டின் மேம்பாட்டிற்கு நம்முடைய சிறிய நேரத்தையும், சேவையையும் பங்களிக்க உறுதி ஏற்கவேண்டும். இதற்காக நமது பிரதமர் தூய்மை இந்தியா என்ற இயக்கத்தை தொடங்கினார். தூய்மையான மற்றும் சுகாதாரமான இந்தியாவை பற்றிய காந்தியின் கனவை நிறைவேற்ற அவர் மக்களை கேட்டுக்கொண்டார். அதை நாம் நிறைவேற்றிட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் கவர்னரின் ஆலோசகர்கள் சந்திரமவுலி, ஏ.பி.மகேஸ்வரி, சிறப்பு செயலாளர் சுந்தரேசன், வேளாண் துறை இயக்குனர் பாலகாந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story