குளித்தலையில் தெப்ப உற்சவம்
பங்குனி உத்திரத்தையொட்டி குளித்தலையில் வெகுவிமரிசையாக தெப்ப உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குளித்தலை
ரெத்தினகிரீசுவரர் கோவில்
கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பரிசல்துறை சாலையில் ரெயில் நிலையம் அருகே அய்யர்மலை ரெத்தினகிரீசுவரர் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பக்குளத்தில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தையொட்டி அய்யர்மலையில் உள்ள ரெத்தினகிரீசுவரர் கோவிலில் இருந்து சாமி கொண்டு வரப்பட்டு தெப்ப உற்சவம் நடத்தப்படுவது வழக்கம்.
கடந்த 1986-ம் ஆண்டுக்கு பிறகு இங்கு தெப்ப உற்சவம் நடைபெறவில்லை. இதையடுத்து 36 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2018-ம் ஆண்டு இங்கு தெப்ப உற்சவம் நடத்தப்பட்டது. பின்னர் 2019-ம் ஆண்டு தெப்ப உற்சவம் நடந்தது.
சிறப்பு அபிஷேக ஆராதனை
இதையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக தெப்ப உற்சவம் நடத்தப்படவில்லை. இதையடுத்து இந்த ஆண்டு பங்குனி உத்திரத்தையொட்டி தெப்ப உற்சவம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. தெப்ப உற்சவத்தையொட்டி நேற்று அய்யர்மலையில் உள்ள ரெத்தினகிரீசுவரர் கோவிலில் இருந்து சாமிகள் குளித்தலை பகுதிக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட சாமிகள் குளித்தலை கடம்பவனேசுவரர் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு அங்கு ரெத்தினகிரீசுவரர் சாமி மற்றும் குளித்தலை கடம்பவனேசுவரர் சாமியின் சந்திப்பு நடைபெற்றது.
தெப்ப உற்சவம்
இதனையடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக சாமி கொண்டு வரப்பட்டு தெப்பக்குளத்தை அடைந்தது. அங்கு அமைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் சாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை தொடர்ந்து தெப்பக்குளத்தில் சாமிகள் சுற்றிவந்து தெப்ப உற்சவம் நடைபெற்றது. அப்போது தெப்பக்குளத்தின் நடுவில் அமைந்துள்ள மண்டபத்தில் சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, சாமி ஊஞ்சல் ஆடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த மண்டபத்தில் இருந்து மீண்டும் சுவாமிகள் கொண்டுவரப்பட்டு தெப்பகுளக்கரையில் வைக்கப்பட்டது. அப்போது பொதுமக்கள் பலர் சாமிக்கு சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இந்த தெப்ப உற்சவத்தை காண திரளான பொதுமக்கள் வந்திருந்தனர்.
Related Tags :
Next Story