கரூர் மாவட்ட முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
பங்குனி உத்திரத்தையொட்டி கரூர் மாவட்ட முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குளித்தலை
பங்குனி உத்திரம்
குளித்தலை அருகே சத்தியமங்கலத்தில் பாலமுருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சுவாமிக்கு கடந்த 20-ந்தேதி முதல் விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி சிறப்பு அபிஷேகம் அலங்காரம், வீதிஉலா போன்றவை நடைபெற்றது. நேற்று முன்தினம் குளித்தலை கடம்பந்துறை காவிரி நதிக்கரையில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீர்த்தக்குடம், காவடி எடுத்துக்கொண்டு இக்கோவிலுக்கு சென்றனர். நேற்று மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மாலை இக்கோவிலில் உள்ள வலம்புரி விநாயகர், வள்ளி தேவசேனா சுப்பிரமணியர் சுவாமிகளின் திருவீதி உலா நடந்தது. பின்னர் மஞ்சள் நீராட்டுடன் இக்கோவில் திருவிழா முடிவடைந்தது. இதேபோல் குளித்தலை பகுதியில் உள்ள பல்வேறு முருகன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து சென்று வழிபட்டனர்.
நொய்யல்
நொய்யல் அருகே உள்ள பாலமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சுவாமிக்கு பால் தயிர், இளநீர், பன்னீர் உள்பட பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையத்தில் உள்ள புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் காவடி பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். அங்கு சாமிக்கு இளநீர் மற்றும் பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். இதேபோல் காகிதபுரம் குடியிருப்பில் உள்ள சுப்பிரமணியர் கோவில், பவித்திரம் பாலமலை முருகன் கோவில், காதப்பாறை வெண்ணமலை முருகன் கோவிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
லாலாபேட்டை
லாலாபேட்டை அருகே பிள்ளபாளையம் சாலையில் அமைந்துள்ள முருகன் கோவிலில் நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி லாலாபேட்டை காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனிதநீரை எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். பின்னர் முருகனுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. பின்னர் சிறப்பு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து தீபாரானை நடந்தது.
தோகைமலை
தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட ஆர்டிமலையில் மலைமீது அமைந்துள்ள விராச்சிலை ஈஸ்வரர் கோவிலில் மூலவர் தெய்வமான முருகனுக்கு நேற்று பால், தயிர், மஞ்சள் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபம் காட்டப்பட்டது.
இதேபோல் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
===========
Related Tags :
Next Story