ஈரோட்டில் கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு
ஈரோட்டில் கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு நடந்தது.
ஈரோடு
ஈரோட்டில் கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு நடந்தது.
தவக்காலம்
கிறிஸ்தவர்களின் முக்கிய திருநாளாக புனித வெள்ளி உள்ளது. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை நினைவுகூறும் வகையில் தொன்று தொட்டே புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலத்தை கடைபிடித்து வருகிறார்கள். அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி சாம்பல் புதன் தினத்தில் இருந்து தவக்காலம் தொடங்கியது.
குருத்தோலை ஞாயிறு
வருகிற ஏப்ரல் 2-ந் தேதி புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு நேற்று குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. ஏசு கிறிஸ்து தனது சிலுவை மரணத்துக்கு முன்னதாக ஜெருசலேம் நகருக்குள் நுழைந்த நிகழ்வை நினைவுகூறுவது குருத்தோலை ஞாயிறு.
கோவேறு கழுதையில், ஜெருசலேம் நகர் நோக்கி ஏசு கிறிஸ்து செல்லும் வழி எங்கும் இஸ்ரேல் மக்கள் யூதர்களின் ராஜாவே வருக என்றும் ஓசன்னா பாடல்கள் பாடி, ஒலிவ மரக்கிளைகளை ஒடித்து குருத்து ஓலைகளாக பிடித்தும் உற்சாகமாக வரவேற்றனர். இந்த நிகழ்வை கிறிஸ்தவர்கள் குருத்தோலைகள் ஏந்தி கொண்டாடுவது குருத்தோலை ஞாயிறு என்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சிறப்பு திருப்பலி
அதன்படி நேற்று ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. பங்குத்தந்தை ஜான் சேவியர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. ஆலயத்துக்கு வந்த அனைவருக்கும் குருத்தோலைகள் வழங்கப்பட்டன. வழக்கமாக நடைபெறும் குருத்தோலை பவனி, கொரோனா காரணமாக நடைபெறவில்லை. மாலையில் உதவி பங்குத்தந்தை ஜான்சன் தலைமையில் திருப்பலி நடந்தது.
நேற்று முதல் துக்க வார நிகழ்வுகள் தொடங்கின. இதை தொடர்ந்து வருகிற 1-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு நற்கருணை நிறுவுதல், நற்கருணை இடமாற்றம் செய்தல் நிகழ்வுகள் நடக்கின்றன. இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை நற்கருணை ஆராதனை நடக்கிறது.
சிலுவைப்பாதை
2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் நற்கருணை ஆராதனை அமைதியான முறையில் நடக்கிறது. பகல் 11 மணிக்கு ஏசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவுகூறும் சிலுவைப்பாதை வழிபாடு நடக்கிறது. பிற்பகல் 6 மணிக்கு திருச்சிலுவை ஆராதனை வழிபாடு நடக்கிறது.
3-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 10.30 மணிக்கு பாஸ்கா திருவிழிப்பு வழிபாடு, புது தீர்த்தம் மந்திரித்தல், ஒளி வழிபாடு, இறைவார்த்தை வழிபாடு, திருமுழுக்கு வழிபாடு மற்றும் ஏசு கிறிஸ்து கல்லறையில் இருந்து உயிருடன் எழும்பிய உயிர்ப்பு (ஈஸ்டர்) பெருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது.
இந்த நிகழ்வுகளை ஈரோடு மறைவட்ட முதன்மை குருவும், ஆலய பங்குத்தந்தையுமான ஜான் சேவியர், உதவி பங்குத்தந்தை ஜான்சன் ஆகியோர் நிறைவேற்றுகிறார்கள்.
இதேபோல் ஈரோடு பிரப் தேவாலயம் உள்பட பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று குருத்தோலை பவனி நடைபெற்றது.
Related Tags :
Next Story