விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலுக்கு வந்த மூதாட்டியிடம் நகை பறித்த தாய்-மகள் கைது


விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலுக்கு வந்த  மூதாட்டியிடம் நகை பறித்த தாய்-மகள் கைது
x
தினத்தந்தி 28 March 2021 8:23 PM GMT (Updated: 28 March 2021 8:23 PM GMT)

மூதாட்டியிடம் நகை பறித்த தாய் மகள் கைது

விருத்தாசலம், 
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் நேற்று பங்குனி உத்திர பெருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலை பயன்படுத்தி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த எருமனூர் கிராமத்தை சேர்ந்த சன்னியாசி மனைவி முருவாயி (வயது 70) என்பவர் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை 2 பெண்கள் பறித்தனர். இதைபார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அந்த 2 பெண்களையும் கையும், களவுமாக பிடித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன், இன்ஸ்பெக்டர் விஜயரங்கன், விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேசன், புஷ்பராஜ் மற்றும் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட பெண்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி தாலுகா காவேட்டிபுரம் ஓஜி குப்பத்தை சேர்ந்த முருகேசன் மனைவி கஸ்தூரி (30) மற்றும் அவரது தாய் மீனாட்சி (48) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் இருவரும் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் திருவிழா நாட்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பக்தர்களிடம் நகைகளை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து மூதாட்டியிடம் நகை பறித்த தாய்-மகளை போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த 2 பவுன் நகையையும் மீட்டனர்.

Next Story