முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அரியலூர்:
கோவில்களில் சிறப்பு பூஜை
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் அரியலூர் நகரில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவில், மின் நகர் முருகன் கோவிலுக்கு செட்டி ஏரிக்கரையில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், பன்னீர் குடம், புஷ்ப காவடி எடுத்து ஊர்வலமாக ஜெயங்கொண்டம் சாலை, மார்க்கெட் தெரு வழியாக வந்து கோவிலை அடைந்தனர். அங்கு முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. மின் நகர் முருகன் கோவிலில் இரவில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் முருகன், வள்ளி, தெய்வானையுடன் திருவீதி உலா நடந்தது.
இதேபோல் அலந்துறையார் கோவில் சன்னதியில் உள்ள முருகனுக்கும், பெரம்பலூர் சாலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் சுவாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. கல்லங்குறிச்சி சாலையில் உள்ள குறைதீர்க்கும் குமரன் கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், திருநீறு, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு சுவாமி காட்சியளித்தார். கைலாசநாதர் கோவில் சன்னதியில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆண்டிமடம்
ஆண்டிமடம் விளந்தையில் உள்ள வள்ளி, தேவசேனா சமேத அழகு சுப்ரமணியர் கோவிலில் பங்குனி உத்திர காவடி திருவிழா, நேற்று காலை விக்னேஸ்வர பூஜை உள்ளிட்டவற்றுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஆண்டிமடம் காட்டுகேணி குளக்கரையில் வேல், காவடிகளுக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் வேண்டுதலுக்கு ஏற்ப வேல் காவடி, மயில் காவடி, பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் அரோகரா கோஷத்துடன் புறப்பட்டனர்.
பல்வேறு வாத்தியங்கள் முழங்க ஆண்டிமடம் நான்கு ரோடு, கடைவீதி, மடத்துத்தெரு, புதுபிள்ளையார் கோவில் தெரு வழியாக சிறுவர்கள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் ஆடியவாறு அழகு சுப்ரமணியர் கோவிலை வந்தடைந்தனர். இதைத்தொடர்ந்து வள்ளி, தேவசேனா, அழகுசுப்ரமணியர் சுவாமிக்கு 1008 சங்கு, 108 கலச பூஜைகள், ஹோமம், சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் இடும்பன், கடம்பன் பூஜை நடைபெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.
வி.கைகாட்டி
வி.கைகாட்டி அருகே அஸ்தினாபுரம் கிராமத்தில் 23 அடி உயர முருகன் சிலையுடன் கூடிய கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 16 வகை பொருட்களால் முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷகம் செய்யப்பட்டது. பின்னர் முருகப்பெருமானுக்கு வஸ்திரம் சாத்தப்பட்டு, மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story