தண்டாயுதபாணி சுவாமி கோவில் பங்குனி உத்திர தேரோட்டம்
செட்டிகுளத்தில் தண்டாயுதபாணி சுவாமி கோவில் பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பாடாலூர்:
பங்குனி உத்திர திருவிழா
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் மலை மீது தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கினால் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை நடத்தி கொள்ளலாம் என்றும் ஆனால் சுவாமி வீதி உலாவிற்கும், தேரோட்டத்திற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
இதையடுத்து இந்து முன்னணியினர் உண்ணாவிரதம் இருந்ததை தொடர்ந்து சுவாமி வீதி உலாவுக்கும், தேரோட்டத்திற்கும் கலெக்டர் அனுமதி வழங்கினார். இதைத்தொடர்ந்து கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும்...
அன்று முதல் 25-ந்தேதி வரை ஒவ்வொரு நாளும் தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனையும், தொடர்ந்து இரவில் வீதி உலாவும் நடைபெற்றது. 26-ந்தேதி முருகன், வள்ளி-தெய்வாணை திருக்கல்யாண உற்சவம், இரவில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. நேற்று முன்தினம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு குதிரை வாகனம், வெள்ளிமயில் வாகனம், அலங்கார பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. நேற்று காலை தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் தங்களது வயல்களில் விளைந்த நெல், மிளகாய், வேர்க்கடலை உள்ளிட்டவற்றையும், ஆடு, மாடு, கோழிகளையும் காணிக்கையாக செலுத்தினர்.
தேரோட்டம்
இதைத்தொடர்ந்து முருகன், வள்ளி-தெய்வானைக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மாலை 4 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து நாதஸ்வர இசை முழங்க, வாணவேடிக்கையுடன் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்களின் பக்தி கோஷம் முழங்க தேர் கம்பீரமாக மலையை சுற்றி அசைந்து ஆடி வந்தது. அப்போது பக்தர்கள் முருகன், வள்ளி-தெய்வானைக்கு அர்ச்சனை செய்தனர்.
இதில் செட்டிகுளம், மலையடிவாரம், பொம்மனப்பாடி, சத்திரமனை, வேலூர், கீழக்கணவாய், மங்கூன், அம்மாபாளையம், களரம்பட்டி, குரூர், சிறுவயலூர், நக்கசேலம், மாவலிங்கை, நாட்டார்மங்கலம், சீதேவிமங்கலம், பாடாலூர், இரூர், ஆலத்தூர்கேட், மருதடி, நாரணமங்கலம், ஈச்சங்காடு உள்ளிட்ட பல்வேறு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தில் பொதுமக்கள் மற்றும் ஆன்மிக சான்றோர்கள் நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கினர். பாதுகாப்பு பணியில் பாடாலூர் போலீசார் மற்றும் பெரம்பலூர் மாவட்ட போலீசார் ஈடுபட்டனர். தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜெயலதா, தக்கார் அருண்பாண்டியன், எழுத்தர் தண்டபாணி தேசிகன் மற்றும் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story