குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்
கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடத்தினர்.
ஆண்டிமடம்:
ஏசு கிறிஸ்துவை யூதர்களின் ராஜாவாக அறிவித்து, ஜெருசலேம் நகருக்குள் ஊர்வலமாக அழைத்துச்சென்ற தினத்தை, குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். இதன்படி ேநற்று குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அரியலூர் மாவட்டம் வரதராஜன்பேட்டை புனித அலங்கார அன்னை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பங்குத்தந்தை வின்சென்ட் ரோச்மாணிக்கம் குருத்தோலை ஞாயிறு ஊர்வலத்தை புனிதப்படுத்தி தொடங்கி வைத்தார். குருத்தோலை பவனியின் போது கிறிஸ்தவ பாடல்களை பாடி ஏசுவின் பாடுகளை கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்தனர். மேலும் கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தியவாறு ஓசான்னா கீதத்தை முழங்கியபடி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். அதனை தொடர்ந்து புனித அலங்கார அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து புனிதப்படுத்தப்பட்ட குருத்தோலையை கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்றனர். குருத்தோலை பவனி நிகழ்ச்சியில் திரளான கிறிஸ்வதர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் தென்னூர் அன்னை லூர்து ஆலயம், ஆண்டிமடம் புனித மார்ட்டினார் ஆலயம், கூவத்தூர் புனித அந்தோணியார் ஆலயம், அகினேஸ்புரம் அகினேஸ் அம்மாள் ஆலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது.
மேலும் சிலுவைப்பாடுகளை சுமந்து உயிர்நீத்த தினத்தை கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் அனுசரித்தும், ஏசு கிறிஸ்து 3-ம் நாள் உயிர்த்தெழுந்ததை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடியும் வருகின்றனர். இதையொட்டி, கிறிஸ்தவர்கள் கடந்த மாதம் 17-ந் தேதி சாம்பல் புதன் அன்று தொடங்கி 40 நாட்கள் விரதமிருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story