மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்துக்கு செல்ல முயன்ற 170 விவசாயிகள் கைது; சத்தியமங்கலத்தில் பரபரப்பு
மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்துக்கு செல்ல முயன்ற 170 விவசாயிகளை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம்
மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்துக்கு செல்ல முயன்ற 170 விவசாயிகளை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
எதிர்ப்பு
கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
அதுமட்டுமின்றி மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு செல்வது என தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சீர்காழி ஆகிய பகுதியை சேர்ந்த தமிழக காவிரி விவசாயிகள் சங்கம், தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு ஆகியவை அறிவித்திருந்தன.
ஊர்வலம்
இதையொட்டி நேற்று முன்தினம் இரவு தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சீர்காழி ஆகிய பகுதியை சேர்ந்த விவசாயிகள் 16 வேன்கள் மற்றும் 4 கார்களில் சத்தியமங்கலம் வந்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்கினர்.
இந்த நிலையில் விவசாயிகள் அனைவரும் நேற்று காலை 10 மணி அளவில் தங்களுடைய விவசாய சங்க கொடிகளை கையில் பிடித்தபடி மண்டபத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்துக்கு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் புண்ணியகோடி, சத்தியமங்கலம் பவானி நதி நீர் ஆற்று பாசன விவசாயிகள் சங்க பொறுப்பாளர் சுப்பு ரவி, சத்தியமங்கலம் தமிழர் பண்பாட்டுக் கழக நிர்வாகி வி.சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தடுத்து நிறுத்தி...
ஊர்வலத்தில் சென்றவர்கள் ‘விடமாட்டோம், விடமாட்டோம் மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்’, ‘கர்நாடக அரசுக்கு துணை போகும் மத்திய அரசை கண்டிக்கிறோம்,’ ‘5 கோடி மக்களின் நீராதாரத்தை மத்திய, மாநில அரசுகளே நிறுத்தாதே,’ என கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர். மேலும் ஊர்வலத்தில் சென்ற விவசாயிகள் கோரிக்கைகள் அடங்கிய பதாைககளையும் கையில் ஏந்தியபடி சென்றனர்.
விவசாயிகளின் ஊர்வலம் 4 கிலோ மீட்டரை கடந்து சத்தியமங்கலத்தை அடுத்த கோம்புபள்ளம் அருகே சென்றபோது மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன்கார்த்திக்குமார் தலைமையில் சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் ஏராளமான போலீசார் அங்கு சென்று ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி விவசாயிகளை கைது செய்வதாக கூறினர்.
170 விவசாயிகள் கைது
இதனால் விவசாயிகள் ரோட்டில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீசாரிடம் விவசாயிகள் கூறுகையில், ‘தேர்தல் நடத்தும் அதிகாரி எங்களுடைய போராட்டம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். எனவே தேர்தல் நடத்தும் அதிகாரி இங்கு நேரில் வரவேண்டும்,’ என்றனர்.
இதைத்தொடர்ந்து பவானிசாகர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அதிகாரி ரவிசங்கர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விவசாயிகளிடம் அவர், ‘உங்கள் கோரிக்கை குறித்து தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கையாக அனுப்பி வைக்கப்படும்,’ என்றார். இதில் சமாதானம் அடைந்த விவசாயிகள் தங்களுடைய தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக 170 விவசாயிகளை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் சத்தியமங்கலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ரூ.9 ஆயிரம் கோடி
இதுகுறித்து அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ‘தஞ்சாவூர் மற்றும் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 200 பேர் இன்று (அதாவது நேற்று) கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்டும் பகுதிக்கு சென்று முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்து சத்தியமங்கலத்துக்கு வந்தோம். இங்கிருந்து ஊர்வலமாக சென்று, பின்னர் ஊர்வலத்தின் முடிவில் வேனில் ஏறி கர்நாடக மாநிலம் செல்ல இருந்தோம். அதற்குள் போலீசார் எங்களை தடுத்து நிறுத்தி கைது செய்துவிட்டனர். கர்நாடகா அரசு தன்னுடைய பட்ஜெட்டில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்க உள்ளதாக அந்த மாநில முதல்- மந்திரி எடியூரப்பா கடந்த வாரம் சட்டமன்றத்தில் அறிவித்து உள்ளார். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கு மத்திய அரசும் துணை போகிறது. அதுமட்டுமின்றி காவிரி மேலாண்மை ஆணையம் உடனே இதை தடுத்து நிறுத்த வேண்டும். இந்திய தேர்தல் ஆணையமும் உடனே தலையிட வற்புறுத்துகிறோம்,’ என்றார்.
Related Tags :
Next Story