ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா: நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை; ஆயிரக்கணக்கான தம்பதிகள் தரிசனம்


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா: நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை; ஆயிரக்கணக்கான தம்பதிகள் தரிசனம்
x
தினத்தந்தி 29 March 2021 2:30 AM IST (Updated: 29 March 2021 2:30 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்த்திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியான நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான தம்பதிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

ஸ்ரீரங்கம், 
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்த்திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியான நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான தம்பதிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

பங்குனி தேர்த்திருவிழா

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் நம்பெருமாள் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவிழாவின் 9-ம் நாளான நேற்று நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது.

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நம்பெருமாளும், தாயாரும் ஒருசேர இருப்பார்கள். பங்குனி உத்திரத்தினத்தன்று நடைபெறும் இந்த நிகழ்ச்சியை கண்டு, பெருமாளையும், தாயாரையும் ஒருசேர தரிசிக்கும் தம்பதிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது ஐதீகம்.

நம்பெருமாள்- தாயார் சேர்த்தி சேவை

இதனால் இந்த சேர்த்தி சேவையை தரிசிக்க ஆயிரக்கணக்கான தம்பதிகள் நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை தந்தனர். இதையொட்டி, கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் தங்கப்பல்லக்கில் நேற்று காலை 6 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து ஆழ்வார் திருச்சுற்று வழியே தாயார் சன்னதி சென்றடைந்தார்.

பின்னர் சமாதானம் கண்டருளி, முன்மண்டபம் வந்து சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் பங்குனி உத்திரமண்டபத்திற்கு பகல் 2 மணிக்கு வந்து சேர்ந்தார். இதைத்தொடர்ந்து மூலஸ்தானத்திலிருந்து உற்சவர் ரெங்கநாச்சியார் புறப்பட்டு சேர்த்தி மண்டபத்தை வந்தடைந்தார். பகல் 3 மணி முதல் இரவு 10.30 மணி வரை சர்வ அலங்காரத்துடன் பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது.

பின்னர் சின்னப்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளி இரவு 10.30 மணிக்கு தாயார் சன்னதியை சென்றடைந்தார். இரவு 12 மணி முதல் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 3.30 மணி வரை திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து தாயார் புறப்பட்டு காலை 5.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

தேரோட்டம்

சர்வஅலங்காரத்துடன் எழுந்தருளியிருந்த பெருமாள்-தாயார் சேர்த்தி சேவையை திரளான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து இரவு முழுக்க தரிசனம் செய்தனர். சேர்த்தி சேவைக்கென தாயார் சன்னதிக்கு வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க பக்தர்கள் சன்னதிக்குள் வரவும் வெளியில் செல்லவும் தனித்தனி வழிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனித் தேரோட்டம் இன்று காலை 8 மணியளவில் நடைபெற உள்ளது. இரவு சப்தாவரணமும், நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு ஆளும் பல்லக்கு வீதி உலாவுடன் பங்குனித்திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் மாரிமுத்து, உதவிஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Next Story