நல்வாழ்வு முகாமுக்கு சென்ற நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி திரும்பியது


நல்வாழ்வு முகாமுக்கு சென்ற நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி திரும்பியது
x
தினத்தந்தி 28 March 2021 9:06 PM GMT (Updated: 28 March 2021 9:06 PM GMT)

நல்வாழ்வு முகாமுக்கு சென்ற நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி திரும்பியது. 30 கிலோ எடை அதிகரித்தது.

நெல்லை, மார்ச்:
நல்வாழ்வு முகாமுக்கு சென்ற நெல்லையப்பர் கோவில் காந்திமதி யானை நேற்று நெல்லை திரும்பி வந்தது. 30 கிலோ எடை அதிகரித்தது.

நல்வாழ்வு முகாம்

இந்து அறநிலையத் துறை சார்பில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி வனபத்ரகாளி அம்மன் கோவில் பகுதியில் உள்ள பவானி ஆற்றங்கரையில் யானைகள் நல்வாழ்வு முகாம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான முகாம் கடந்த பிப்ரவரி மாதம் 8-ந் தேதி தொடங்கியது. தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில் யானைகளும் வரவழைக்கப்பட்டன. முகாமில் யானைகளுக்கு உடற்பயிற்சி, ஆரோக்கியமான மூலிகை, உணவு குளியல், நடைப்பயிற்சி உள்ளிட்ட மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

நெல்லை திரும்பியது

யானைகள் நல்வாழ்வு முகாம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. அங்கிருந்து அனைத்து யானைகளும் லாரியில் ஏற்றப்பட்டு அந்தந்த கோவில்களுக்கு செல்லப்பட்டன. நெல்லையப்பர் கோவில் காந்திமதி யானை நேற்று காலை லாரியில் நெல்லை திரும்பியது. அந்த யானை நெல்லை சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளியில் இருந்து லாரியில் இறங்கி நெல்லையப்பர் கோவிலுக்கு வந்தது.

எடை அதிகரிப்பு

இதுகுறித்து யானை பாகனிடம் கேட்ட போது, நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதிக்கு 50 வயது ஆகிறது. 13-வது முறையாக முகாமுக்கு சென்றுள்ளது. முகாம் 48 நாட்கள் நடந்தது. முகாமுக்கு யானை சென்ற போது 3,960 கிலோ இருந்தது. முகாமிலிருந்து வந்தபோது 3,990 கிலோ உள்ளது. அதாவது 30 கிலோ எடை அதிகரித்து உள்ளது.

யானைக்கு இனிப்பு, தேங்காய், வாழைப்பழம் போன்ற உணவு பொருட்கள் கொடுக்கக் கூடாது என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். காய்கள் மட்டும் தான் கொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர். மேலும் தொடர்ந்து நடைபயிற்சி செல்ல வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பாட்ட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். மருத்துவரின் ஆலோசனைப்படி யானையை பராமரித்து வருகிறோம் என்றார்.

Next Story