மதஒற்றுமையை சீர்குலைப்பது தி.மு.க. கூட்டணி


மதஒற்றுமையை  சீர்குலைப்பது தி.மு.க. கூட்டணி
x
தினத்தந்தி 29 March 2021 4:16 AM IST (Updated: 29 March 2021 4:16 AM IST)
t-max-icont-min-icon

மதஒற்றுமையை சீர்குலைப்பது தி.மு.க. கூட்டணி என்று பல்லடத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ஜி.கே.வாசன் பேசினார்.

பல்லடம்
மதஒற்றுமையை  சீர்குலைப்பது தி.மு.க. கூட்டணி என்று பல்லடத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ஜி.கே.வாசன் பேசினார். 
 ஜி கே வாசன் பிரசாரம் 
பல்லடம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனை ஆதரித்து கணபதிபாளையத்தில், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது
தமிழகத்தில், மகளிருக்கான ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியவர் ஜெயலலிதா. அவர்களின் வழியில் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து மகளிருக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒரு பெண் கல்வி அறிவு பெற்றால் ஒரு குடும்பமே கல்வி அறிவு பெற்றதற்கு சமம். ஒரு குடும்பம் கல்வி அறிவு பெற்றால் ஒரு சமுதாயம் கல்வி அறிவு பெற்றதற்கு சமம். ஒரு சமுதாயம் கல்வியறிவு பெற்றால் ஒரு நாடு பெற்றதற்கு சமம். இதை உணர்ந்துதான் மகளிருக்கான திட்டங்களை அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அது தொடர நீங்கள் அ.தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும்.
 தமிழகத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்  இருவரும் இணைந்து கொடுத்த தேர்தல் அறிக்கையானது ஒரு அருமையான தேர்தல் அறிக்கை ஆகும். இதன்படி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் கொடுக்கப்படும். பெண்கள் அதிகமாக இருப்பது சமையலறை. அங்கு நீங்கள் படும் கஷ்டங்களை குறைக்க வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக தரப்படும். மேலும் சூரிய ஒளி அடுப்பு வழங்கப்படும். மகளிர் சுய உதவிக் குழுக்களின் வங்கி கடன்கள் ரத்து செய்யப்படும். 
பொய் வாக்குறுதிகள்
அ.தி.மு.க. அரசுக்கு நல்ல மனசு இருக்கிறது. அதனால் இவ்வளவு அருமையான திட்டங்களை மக்களுக்கு தருகிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியினர், பொய் வாக்குறுதிகளை சொல்லி உங்களை ஏமாற்றினார்கள். இந்த தேர்தலில் நீங்கள் அவர்களை ஏமாற்ற வேண்டும். செயல்படுத்த முடியாத திட்டங்களை, பொய் வாக்குறுதிகளை சொல்லி தி.மு.க.வினர் ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள். ஒருபோதும் அது நடக்காது. வளர்ச்சி என்பது அ.தி.மு.க.வின் ஆட்சியில் தான் நடக்கும். தமிழகம் தொடர்ந்து வளர்ச்சி பெற அ.தி.மு.க.வை ஆதரியுங்கள். 
சட்டமன்றம் என்பது, மக்கள் பிரச்சினைகளை, எடுத்துச் சொல்லி தீர்வு காண்பது. ஆனால் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் உள்ளே, வெளியே, ஆட்டம் ஆடிக்கொண்டு, சட்டசபைக்கு செல்லாமல் வெளிநடப்பு செய்வதிலேயே 5 வருடங்களை கழித்து விட்டனர். இப்போது ஆட்சிக்கு வர துடிக்கின்றனர். சிறுபான்மையினருக்கு ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை அ.தி.மு.க. அரசு தந்துள்ளது. ஆனால் மக்களின் ஒற்றுமையை குலைக்கும் வகையில் பிரசாரம் செய்து, அதில் வெற்றி பெற தி.மு.க.வினர் துடிக்கின்றனர்.
 மதவாதம் கிடையாது
மத ஒற்றுமையை சீர்குலைப்பது தி.மு.க. கூட்டணி, மத ஒற்றுமையை வலியுறுத்துவது அ.தி.மு.க. கூட்டணி. இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் மதவாதம் கிடையாது. அதை பரப்ப முயல்பவர்கள் தோல்வி அடைவார்கள். 
 இவ்வாறு அவர் பேசினார். 


Next Story